
திண்டுக்கல்
திண்டுக்கல்லில் மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனத்தினர் (சிஐடியு) ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில், வட்டார போக்குவரத்துக் கழகம் அருகில் தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனத்தினர் (சிஐடியு) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு நிர்வாகி பிச்சைமுத்து தலைமை தாங்கினார். தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனத்தின் செயலர் தனசாமி, பொருளாளர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்டத் தலைவர் கே.முத்துராஜ் சிறப்புரை ஆற்றினார்.
அப்போது, "மாநில உரிமைகளை பறிக்கும் வகையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை கைவிட வேண்டும்.
கால் டாக்சிகளுக்கு அரசு கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும்.
ஓட்டுநரின் வாழ்வாதாரமான உரிமத்தை அற்ப காரணங்களை கூறி பறிமுதல் செய்வதை கைவிட வேண்டும்" என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.