
தருமபுரி
காணாமல் போன காதல் ஜோடியை காவலாளர்கள் தேடிவந்த நிலையில் "எங்களை யாரும் கடத்தவில்லை" என்று தருமபுரி மாவட்ட காவல்துறைக்கு கடிதம் ஒன்றை காதல் ஜோசி அனுப்பியுள்ளது.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளியைச் சேர்ந்த இரு வேறு சமூகத்தினரான ராஜ்குமார் மற்றும் பிரியங்கா காதலித்து வந்தனர். இதற்கு பிரியங்கா குடும்பத்தினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை முதல் இருவரையும் காணவில்லை. இது தொடர்பாக, பிரியங்காவின் பெற்றோர் தங்களது மகளை, அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் கடத்திச் சென்றுவிட்டதாகவும், அவரை மீட்டுத் தர வேண்டும் என்றும் அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அந்த புகாரின்பேரில், வழக்குப் பதிந்த காவலாளர்கள், தனிப்படை அமைத்து அவர்களைத் தேடி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக நிகழ்ந்த தகராறு உள்பட மூன்று வழக்குகளை காவல் துறையினர் பதிவு செய்துள்ளனர் என்பதும், இரு தரப்பிலும் இதுவரை ஆறு பேரை காவலாளர்கள் கைது செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை, தருமபுரி மாவட்டக் காவல் துறைக்கு காணாமல் போன ராஜ்குமார் மற்றும் பிரியங்கா பதிவு அஞ்சலில் கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தனர்.
அந்தக் கடிதத்தில், "நாங்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வருகிறோம். நாங்கள் விருப்பத்துடனே ஊரைவிட்டு வெளியேறியுள்ளோம். எங்களை யாரும் கடத்தவில்லை.
எனவே, எங்களது பெற்றோருக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும், பிரியங்கா கடத்தப்பட்டதாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தனிப் படை காவலாளர்கள் அவர்களை தொடர்ந்து தேடி வருகின்றனராம்.