
அவினாசி,
அவினாசி அருகே இறந்தவரின் உடலை அடக்கம் செய்வதில் இருதரப்பினரிடையே .ஏற்பட்ட மோதலில் சாலை மறியலில் ஈடுபட்ட இறந்தவரின் உறவினர்களான 8 பெண்கள் உள்பட 17 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்து பெருமாநல்லூர் பட்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி (46). உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட சின்னச்சாமி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
இதையடுத்து சின்னசாமியின் உடலை அடக்கம் செய்வதற்காக அவரது உறவினர்கள் அப்பகுதியில் உள்ள மயானத்திற்கு கொண்டுச் சென்றனர்.
அப்போது அப்பகுதியை சேர்ந்தவர்கள் அங்குள்ள மயானத்தில் சின்னசாமியின் உடலை அடக்க செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பும் ஏற்பட்டது.
இதனால் சின்னசாமியின் உடலைக் கொண்டுச் சென்ற அவருடைய உறவினர்கள் ஆத்திரம் அடைந்து அவருடைய உடலை பாடையுடன் பட்டம்பாளையம் – நம்பியூர் சாலையில் வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் அவினாசி சமூக நல பாதுகாப்பு திட்ட துணை தாசில்தார் பூபதி, அவினாசி துணை காவல் சூப்பிரண்டு பரமசாமி, குன்னத்தூர் இன்ஸ்பெக்டர் ஆறுச்சாமி மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது இறந்தவரின் உறவினர்கள் கூறுகையில் “எங்கள் தரப்பை சேர்ந்தவர்கள் இறந்தால் இங்குள்ள மயானத்தில்தான் 50 ஆண்டுகளுக்கும் மேலாக உடலை அடக்கம் செய்து வருகிறோம். எனவே சின்னசாமியின் உடலை இங்குதான் அடக்கம் செய்வோம்” என்றனர்.
அதற்கு பதில் அளித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறும்போது “இந்த இடம் அரசு நத்தம் பகுதியாகும். இப்போது இந்த பகுதியில் குடியிருப்புகள் வந்துவிட்டன. குடியிருப்புகள் உள்ள பகுதியில் இறந்தவர் உடலை அடக்கம் செய்யக் கூடாது” என்றனர்
இதனால் இறந்தவரின் உறவினர்களுக்கும், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் இடையே நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடந்தது.
ஆனாலும் அவர்கள் சாலை மறியலை கைவிட மறுத்ததால் 8 பெண்கள் உள்பட 17 பேரை காவலாளர்கள் கைது செய்து அப்பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்திற்குக் கொண்டுச் சென்றனர்.
அதன்பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் அங்குள்ள பொது மயானத்தில் சின்னசாமியின் உடலை அடக்கம் செய்வது என சமரசம் ஏற்பட்டது. அதன்பின்னரே கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
அவினாசி அருகே பட்டம்பாளையம் சாலையில் இறந்தவரின் உடலை வைத்து போராட்டம் நடத்தியதால் அங்கு சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் சிரமத்திற்கு உள்ளானதால் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.