
மலைக்கோட்டை,
சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி பல இலட்சம் மோசடி செய்த தனியார் டிராவல்ஸ் நிறுவனர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை வேங்கைகுறிச்சியை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகன் பழனிவேல் (27).
இதேபோல் கோவை மாவட்டம் இடையார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (52). இவர் திருச்சி சிந்தாமணி பஜார் பகுதியில் வெளிநாட்டிற்கு வேலைக்கு ஆள் அனுப்பும் தனியார் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீனிவாசனிடம் சிங்கப்பூரில் வேலை வாங்கி தருமாறு பழனிவேல் ரூ.1 இலட்சம் கொடுத்துள்ளார்.
ஆனால், இதுவரை வேலை வாங்கி தராததால், ஆத்திரமடைந்த பழனிவேல், தான் கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு சீனிவாசனிடம் கேட்டுள்ளார்.
ஆனால் சீனிவாசன் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. மாறாக சிங்கப்பூர் செல்வதற்காக பழனிவேலுக்கு, சீனிவாசன் சுற்றுலா விசா எடுத்து கொடுத்து மோசடி செய்துள்ளார்.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி பழனிவேல் திருச்சி மாநகர காவல் ஆய்வாளர் அலுவலகத்தில் மனு ஒன்றைக் கொடுத்தார்.
இதனையடுத்து கோட்டை காவல் இன்ஸ்பெக்டர் சீத்தாராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சீனிவாசனை கைது செய்தார்.
சீனிவாசன் மேலும் பல்வேறு நபர்களிடம் “வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பல இலட்சம் பணம் வாங்கி மோசடி செய்துள்ளதாக காவலாளர்கள் விசாரணையில் தெரிய வந்துள்ளது.