
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள அடைக்கலாபுரம் பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு பாத யாத்திரையாக சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது, தூத்துக்குடி- மதுரை தேசிய நெடுஞ்சாலை ஓட்டப்பிடாரம் அருகே குறுக்கு சாலை அருகே உள்ள பாலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்துள்ளனர்.
அப்போது, தஞ்சாவூரில் இருந்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மதுரை நோக்கி தஞ்சாவூருக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது குறுக்கு சாலை அருகே உள்ள பாலம் அருகே கார் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது மோதியது.
இதில், வீரபாண்டிய பட்டினத்தைச் சேர்ந்த சுந்தரராணி (60), இசக்கியம்மாள் (55), கரம்பவிளையைச் பகுதியை சேர்ந்த கஸ்தூரி (55), ஆகியோர் தூக்கி வீசப்பட்டு உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஓட்டப்பிடாரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சம்பவ இடத்தை மணியாச்சி சரக டிஎஸ்பி அருள் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு விபத்து ஏற்படுத்திய கார் டிரைவரான தஞ்சாவூரைச் சேர்ந்த ராம் பிரசாத் (32) என்பவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். பாத யாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதியதில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.