ஆர்.கே.நகர் மக்களுக்கு மீண்டும் அடிக்கிறது ஜாக்பாட்..? டிசம்பர் 31-க்குள் இடைத்தேர்தல்..! தலைமை தேர்தல் ஆணையர் தகவல்..!

First Published Oct 12, 2017, 5:28 PM IST
Highlights
r.k.nagar by election within coming december


ஜெயலலிதா இறந்ததால் காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் டிசம்பர் 31-க்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் அச்சல்குமார் ஜோதி தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்ததை அடுத்து கடந்த ஏப்ரல் 12-ம் தேதி அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. 

அதிமுக அம்மா அணியின் சார்பில் தினகரன், அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருதுகணேஷ் மற்றும் பாஜக சார்பில் கங்கை அமரன் உட்பட 62 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

தினகரனுக்கு அந்த நேரத்தில் அமைச்சர்கள் ஆதரவாக இருந்ததால் அனைத்து அமைச்சர்களும் தினகரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டனர். 

ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகரும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சில ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

இதையடுத்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. ஆனால் அதன்பிறகு தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.

ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் பயப்படுகிறது என்றும் விரைவில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என நம்புவதாகவும் அதற்கும் மேலாக காலம் தாழ்த்தக்கூடாது எனவும் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் அச்சல்குமார் ஜோதி, இந்த ஆண்டு இறுதிக்குள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்தார்.

மீண்டும் ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்யப்படுமா? என்பதைப் பொறுத்தே தேர்தல் நடைபெறுமா என்பது தெரியும். 
 

click me!