ஆருத்ரா மோசடி வழக்கில் பல மாதங்களாக தலைமறைவாக இருந்த வந்த பாஜக நிர்வாகியும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் இன்று காலை சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் பிடித்து குடியுரிமை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
ஆரூத்ரா -ரூ.2438 கோடி மோசடி
சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீடு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அதிக வட்டி தருவதாக அறிவித்தது. முதலீடுகளுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி எனக் கூறி சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து, 2 ஆயிரத்து 438 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
undefined
இந்தநிலையில் வாக்குறுதி கொடுத்த படி வட்டியும் கொடுக்காமல் வாடிக்கையாளர்கள் முதலீடு செய்த பணத்தையும் கொடுக்காமல் ஆருத்ரா நிறுவனம் மோசடி செய்தது தெரியவந்தது. இதனையடுத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர்.
தலைமறைவான நிர்வாகிகள்- லுக் அவுட் நோட்டீஸ்
ஆரூத்ரா நிறுவனத்தில் தொடர்புடைய நிர்வாகிகள் வெளிநாட்டிற்கு தப்பி சென்றனர். இதனையடுத்து இந்த வழக்கில் துபாயில் தலைமறைவாக இருந்த ராஜசேகரை துபாய் காவல்துறையினர் கைது செய்தனர். எம்லாட் சட்ட ஒப்பந்த அடிப்படையில் துபாயில் பதுங்கி இருக்கும் ஆருத்ரா கோல்ட் டிரேடிங் மோசடியில் குற்றம் சாட்டப்பட்டவர்களை பிடித்து தருமாறு மாநில பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை கோரிக்கை வைக்கப்பட்டதன் அடிப்படையில் துபாய் காவல்துறை அவரை கைது செய்தனர். இதே போல ஆருத்ரா மோசடி வழக்கில் பாஜக நிர்வாகிகள் மீதும் புகார் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக பாஜக நிர்வாகியும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ்க்கு ஆரூத்ரா கோல்டு நிதி நிறுவன வழக்கில் கைதான ரூஷோ என்பவர் நடிகர் ஆர்.கே.சுரேஷுக்கு ரூ.12.50 கோடி கொடுத்ததாக குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை திரும்பிய ஆர் கே சுரேஷ்
இதனையடுத்து இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகும் படி ஆர்.கே.சுரேஷ்க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் விசாரணைக்கு ஆஜராகாமல் ஆர்.கே.சுரேஷ் பல மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்தார். இதனையடுத்து நடிகர் ஆர்.கே.சுரேஷ் மீது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தார். அவரை சென்னை விமான நிலையத்தில் குடியுரிமைத்துறை அதிகாரிகள் சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் விசாரணைக்கு ஆஜராக வந்ததாக தெரிவித்ததால் ஆர்.கே.சுரேஷை குடியுரிமைத்துறை அதிகாரிகள் விடுவித்தனர். இதனையடுத்து நாளை மறுதினம் (டிசம்பர் 12ஆம் தேதி) பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முன் ஆர்.கே.சுரேஷ் விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.
இதையும் படியுங்கள்
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி: ஆர்.கே.சுரேஷ் ரூ.15 கோடி வாங்கியது அம்பலம் - பகீர் தகவல்!