
திமுக, சமூக வலைதளங்களில் வைகோவை தவறாக விமர்சனம் செய்து வருவது கண்டிக்கதக்கது என்றும் அரசியல் அறனற்றது என்றும் மதிமுக துணைப் பொதுச் செயலர் மல்லை சத்யா தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் மதிமுக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் க.சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.
அப்போது, அவர் கூறியது:
“வரும் உள்ளாட்சித் தேர்தலில் மதிமுக போட்டியிடுவது உறுதி. அதன் காரணமாகவே ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
மக்கள்நலக் கூட்டணி கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது ஊழலற்ற நேர்மையான ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காகவே தொடங்கப்பட்டு, தேர்தலில் போட்டியிட்டது. ஆனால், தேர்தலில் ஏற்பட்ட தோல்வியின் காரணமாக தேமுதிக, தமாகா ஆகியவை கூட்டணியிலிருந்து வெளியேறின.
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 பணத்தாள்கள் செல்லாது என்று அறிவித்தபோது கூட்டணிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மதிமுக மக்கள் நலக் கூட்டணியிலிருந்து வெளியேறியது.
தற்போது விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணியிலிருந்து வெளியேறி உள்ளன.
மக்கள் நலக் கூட்டணி நல்ல நோக்கத்துக்காக தொடங்கப்பட்டிருந்தாலும் அதை அங்கீகரிக்காமல், ஊழல்வாதிகளை மக்கள் அங்கீகரித்ததால்தான் மக்கள் நலக் கூட்டணி சிதறியது.
அண்மைக் காலமாக மக்கள் பிரச்சனையில் வைகோ கருத்து சொல்லாமல் இருக்கிறார் என்ற செய்தி தவறானது. மக்கள் பிரச்னையில் தன்னுடைய கருத்தை வைகோ அவ்வப்போது வெளிபடுத்தியே வருகிறார்.
திமுக, வைகோவை சமூக வலைதளங்களில் தவறாக விமர்சனம் செய்து வருவது கண்டிக்கதக்கது. அது அரசியல் அறனற்றது.
தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டத்தை மத்திய அரசு அறிவித்தபோது அத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்து தடை ஆணையை முதலில் பெற்றவர் வைகோ.
அதைத் தொடர்ந்து, தற்போது பசுமை தீர்ப்பாயம் தடையாணை பிறப்பித்துள்ளது வரவேற்கதக்கது.
இதேபோல, ஹைட்ரோகார்பன் திட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும் என தொடுக்கப்பட்டுள்ள வழக்கிலும் வைகோ வெற்றி பெறுவார்” என்று அவர் கூறினார்.