வீட்டை ஏமாற்றி எழுதி வாங்கிக் கொண்டதால் ஓய்வுபெற்ற ஆசிரியை தீக்குளித்து சாவு; காங்கிரசு முன்னாள் கவுன்சிலர் அடாவடி...

Asianet News Tamil  
Published : Jan 30, 2018, 10:28 AM ISTUpdated : Sep 19, 2018, 01:53 AM IST
வீட்டை ஏமாற்றி எழுதி வாங்கிக் கொண்டதால் ஓய்வுபெற்ற ஆசிரியை தீக்குளித்து சாவு; காங்கிரசு முன்னாள் கவுன்சிலர் அடாவடி...

சுருக்கம்

retired teacher was burnt and killed herself because cheated by Former Councilor of Congress

வேலூர்

திருப்பத்தூரில், காங்கிரசு கட்சியின் முன்னாள் கவுன்சிலர் அடாவடியாக வீட்டை ஏமாற்றி எழுதி வாங்கிக் கொண்டதால் ஓய்வுபெற்ற ஆசிரியை தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் உள்ள பாலம்மாள் காலனியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தாசில்தார் தயாநிதி. இவரது 2-வது மனைவி வனஜா (63). ஆசிரியையாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு அருண்மொழிதேவி (32) என்ற மகள் உள்ளார்.

கடந்த 1999-ஆம் ஆண்டு பாலம்மாள் காலனியில் உள்ள 3290 சதுர அடி வீட்டை தயாநிதி தனது 2-வது மனைவி வனஜா பெயருக்கு உயில் எழுதி வைத்தார். அதன்பிறகு, கடந்த 2013-ஆம் ஆண்டு உடல் நலம் சரியில்லாமல் தயாநிதி இறந்துவிட்டார்.

கணவன் இறந்த பிறகு அந்த வீட்டை வனஜா தனது மகள் அருண்மொழிதேவிக்கு தானமாக எழுதி வைத்தார். அதனை அறிந்த முதல் மனைவி ராஜகுமாரி, தனக்குத்தான் வீடு சொந்தம் என்று கூறி, வீட்டை காலி செய்யும்படி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இதுதொடர்பான வழக்கு நடந்து கொண்டிருக்கிற நிலையில் அதே வார்டைச் சேர்ந்த காங்கிரசு கட்சியின் முன்னாள் கவுன்சிலர் பாரத் என்பவர் வனஜாவிடம், வீட்டை எனது பெயருக்கு மாற்றி எழுதி கொடு வழக்கை முடித்து உன்னிடம் வீட்டை ஒப்படைக்கிறேன் என்று கூறியுள்ளாராம்.

அதன்பேரில், கடந்த 5.9.17-ஆம் தேதி பாரத் பெயருக்கு வீடு பதிவு செய்யப்பட்டதாம். பின்னர் ஒரு வாரம் கழித்து வனஜாவை வீட்டைவிட்டு வெளியேற்றிவிட்டு, அவசர அவசரமாக பாரத் வீட்டை இடித்து புதியதாக கட்டிட வேலையைத் தொடங்கி உள்ளார்.

மேலும், அருகில் உள்ளவர்களிடம் ரூ.10 இலட்சம் கொடுத்து வீட்டை விலைக்கு வாங்கிவிட்டேன் என்று கூறியுள்ளார். இதனால் ஏமாற்றம் அடைந்த வனஜா, அருண்மொழிதேவி ஆகிய இருவரும் தங்களது வீட்டை மீட்டுத்தரும்படி ஆட்சியர் மற்றும் திருப்பத்தூர் உதவி ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

தற்போது அந்த வீட்டின் மதிப்பு ரூ.1 கோடி இருக்குமாம். இந்த நிலையில் நேற்று மதியம் வனஜா உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் அவர் உடல் கருகி  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்ததும் திருப்பத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர்பாலகிருஷ்ணன், ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் அருண்மொழிதேவி புகார் அளித்தார். அதன்பேரில் காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவலாளர்கள் நடத்திய விசாரணையில், வனஜா தற்கொலை செய்வதற்கு முன்பு தனது மகள் அருண்மொழிதேவி உள்பட ஒன்பது பேருக்கு பதிவு தபாலில் கடிதம் ஒன்று அனுப்பியிருந்தது தெரியவந்தது. அந்த தபாலில் வனஜா என்ன எழுதியுள்ளார்? என்ற விவரம் இன்று தான் தெரியவரும் என்று காவலாளர்கள் தெரிவித்தனர்.

PREV
click me!

Recommended Stories

ரயில்களில் வனவிலங்குகள் அடிபடாமல் இருப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது - ராஜ கண்ணப்பன்
ஜெயலலிதா எம்ஜிஆர் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் வரும் - மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் பேட்டி