வீட்டின் கழிவறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர்; உடனிருந்த பெண் யார்?

First Published Mar 13, 2018, 10:53 AM IST
Highlights
Retired police assistant inspector was mysteriously dead in house police investigation


அரியலூர்

அரியலூரில் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் தனது வீட்டின் கழிவறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவருடன் துணையாக இருந்த பெண் தலைமறைவாகிவிட்டதால் அவரை தேடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர் காவலாளர்கள்.

அரியலூர் மாவட்டம், செயங்கொண்டத்தை அடுத்த ஒக்கநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன் (60). இவர் சில வருடங்களுக்கு முன்பு ஆண்டிமடம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வுபெற்றார். இவரது மனைவி வசந்தா (54). இவர்களுக்கு சாமிநாதன் (24) என்ற மகனும், ரஞ்சினி (28), ரமணி (26) என இரண்டு மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது.

அன்பழகன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு, செயங்கொண்டம் வேலாயுதநகர் 9-வது குறுக்குத் தெருவில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தனியாக வசித்து வந்தார். அந்த வீட்டில் செந்துறை அருகே உள்ள சேடக்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வீட்டு வேலைகளை செய்துகொண்டு அன்பழகனுக்கு துணையாக இருந்து வந்தாராம்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை அன்பழகன், வீட்டின் கழிவறையில் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக, அவரது மனைவி வசந்தாவிற்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவர் அங்கு விரைந்து சென்று, தனது கணவர் உடலை பார்த்து கதறி அழுதார். அவரது சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் வீட்டின் முன்பு திரண்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த செயங்கொண்டம் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அதன்பின்னர் அன்பழகன் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக செயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து வசந்தா, செயங்கொண்டம் காவல் நிலையத்தில் தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் காவல் ஆய்வாளர் வேலுச்சாமி வழக்குப்பதிந்து அன்பழகன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் அவரை கொலை செய்தனரா? போன்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார். 

இதனிடையே அன்பழகன் வீட்டில் தங்கியிருந்த பெண் தலைமறைவாகி விட்டார். அந்த பெண்ணையும் காவலாளர்கள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர் சிக்கினால்தான் அன்பழகன் சாவுக்கான காரணம் தெரியவரும் என்பதால் தீவிரமாக விசாரித்து வருகின்றனர் காவலாளரள்.
 

click me!