மின்சாரம் பாய்ந்து கொத்தனார் சாவு; அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்று மக்கள் சாலை மறியல்...

Asianet News Tamil  
Published : Mar 13, 2018, 10:44 AM ISTUpdated : Sep 19, 2018, 02:04 AM IST
மின்சாரம் பாய்ந்து கொத்தனார் சாவு; அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்று மக்கள் சாலை மறியல்...

சுருக்கம்

man died for current hit people held in road block death cause is authorities ...

அரியலூர்

அரியலூரில் மயானம் கட்டும் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் மின்சாரம் பாய்ந்து கொத்தனார் பலியானதற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்று மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர் மாவட்டம், தா.பழூர் காலனி தெருவைச் சேர்ந்தவர் தங்கராசு (55). கொத்தனாரான இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மனைவி இறந்துவிட்டார். 

தங்கராசு தா.பழூரை அடுத்த சிந்தாமணி பாலம் அருகில் மயானம் கட்டும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று காலை வழக்கம்போல கட்டட வேலைக்கு சென்றார். அங்கு அவர், மயான மேற்கூரையில் சிமெண்டு பூச்சு பணி செய்து கொண்டிருந்தார். 

அப்போது, தங்கராசு திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தபோது மயான மேற்கூரையை ஒட்டி சென்ற, உயர் அழுத்த மின் கம்பியில் எதிர்பாராதவிதமாக அவரது கை பட்டது. இதில் மின்சாரம் அவர் மீது பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட தங்கராசு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்து தகவலறிந்த தா.பழூர் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தங்கராசு உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக செயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  இதுகுறித்து தா.பழூர் காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். 

தங்கராசு மின்சாரம் பாய்ந்து இறந்த தகவல் கேட்டு  ஆத்திரமடைந்த தா.பழூர் மற்றும் சிந்தாமணி காலனி தெருவை சேர்ந்த மக்கள் மயானம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து, தா.பழூர் - செயங்கொண்டம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மறியலில் ஈடுபட்ட மக்கள், "சிந்தாமணி கிராமத்தில் புதிதாக மயான கொட்டகை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த கொட்டகையின் மேற்கூரையில் அருகில் தாழ்வான உயரத்தில் உயர் அழுத்த மின்கம்பி செல்கிறது. இங்கு மயானம் கட்டாதீர்கள், இதனால் உயிர்பலி ஏற்பட வாய்ப்புண்டு என்று கட்டடப்பணி ஆரம்பிக்கும்போதே தெரிவித்தோம். ஆனால், அதிகாரிகள் அதை கண்டு கொள்ளவில்லை. 

அன்றைக்கே இது தொடர்புடைய அதிகாரிகள் மின்பாதையை சீரமைத்து, அதன்பிறகு கட்டிட பணிகளை தொடங்க நடவடிக்கை எடுத்து இருந்தால், இன்றைக்கு இந்த உயிர் பலி ஏற்பட்டிருக்காது. 

அதிகாரிகளின் அலட்சியத்தால்தான் இந்த விபத்து நடந்துள்ளது. இதற்கு பிறகும் இதை சீரமைக்கவில்லை என்றால், தொடர்ந்து உயிர்பலி ஏற்பட வாய்ப்புண்டு. 

எனவே மக்களுக்கு எந்தவித இடையூறு இல்லாதபடி மயான கொட்டகையை வேறு இடத்தில் அமைக்க வேண்டும்" என்று கூறினர்.

இதுகுறித்து தகவலறிந்து தா.பழூர் காவலாளர்கள் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையேற்று மக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

PREV
click me!

Recommended Stories

மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த புரட்சிக் கலைஞர்.. கேப்டன் விஜயகாந்துக்கு புகழாரம் சூட்டிய விஜய்!
விவசாய நிலத்தில் தங்கப் புதையல்.. தோண்டத் தோண்ட வெளிவந்த 86 தங்க நாணயங்கள் மீட்பு!