
மீனவர்கள் பிரச்னைக்கு முடிவு கட்ட கச்சத்தீவை மீட்க வேண்டும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரம் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் நெற்று இரவு 8 மணி அளவில் தனுஷ்கோடி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தங்கச்சிமடத்தை சேர்ந்த டிட்டோ என்பவரின் படகின் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதில் ராமேஸ்வரம் மீனவர் பிரிட்சோ என்பவர் துப்பாக்கிச் சூட்டால் கொல்லப்பட்டார்.
இதையடுத்து இலங்கை அரசின் அராஜக போக்கினை கண்டித்து தங்கச்சிமட மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சுட்டுகொல்லப்பட்ட மீனவரின் உறவினர்களுக்கு அமைச்சர் ஜெயகுமார், மணிகண்டன் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர். அப்போது மீனவர்களிடையே மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் பேசினார்.
அவர் பேசியதாவது :
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது.
மீனவர்கள் பிரச்சனையை தீர்க்க முழு நடவடிக்கை எடுக்கபடும்.
நாடாளுமன்றத்தில் மீனவர் பிரச்சனை குறித்து அதிமுக எம்.பிக்கள் எழுப்புவார்கள்.
பல நூற்றாண்டுகள் மீனவர்கள் கச்சத்தீவில் மீன் பிடித்து கொண்டுதான் இருந்தார்கள்.
இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள், மற்றும் படகுகளை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டு சேதமான படகுகளுக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்.
மீனவர் பிரச்சனையை தீர்பதற்கு ஒரே தீர்வு கச்சத்தீவை மீட்பதுதான்.
கச்சத்தீவை நிச்சயம் மீட்டே தீருவோம். உங்களுடன் சேர்ந்து முழு வீச்சுடன் போராடுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.