
ராமேஸ்வரத்தை அடுத்த தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ராமநாதபுரம், நாகை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
இதன் முதல் கட்டமாக தங்கச்சிமடம் பகுதியில் மீனவர் போராட்டத்தில் ஈடுபடும் வகையில் அங்கு பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.
மீனவர்களின் முதல் கோரிக்கையாக, சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை இழுத்து மூட வேண்டும் என மீனவர்கள் தெரிவித்தனர்.
உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும், இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் மத்திய அரசு, இலங்கை அரசிடம் அழுத்தம் தர வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனர்.
தற்போது போராட்ட பந்தலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களும், மீனவர்களும், பொது மக்களும் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் ஜல்லிக்கட்டு, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட போராட்டங்களுக்கு எப்படி ஆதரவு தந்தார்களோ அதைப் போன்று மீனவர் பிரச்சனைக்கும் மாணவர்களும், இளைஞர்களும் ஆதரவு தரவேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
இதே போன்று புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப் பட்டணம் பகுதியில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் பங்கேற்றுள்ள பிரமாண்ட போராட்டம் நடைபெற்று வருகிறது
இதனிடையே கன்னியாகுமரி, நாகபட்டிணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.