காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு தற்போது ஆணையிட்டுள்ளவாறு தமிழ்நாட்டிற்கு காவிரி நீரைத் தர முடியாது என்று மறுத்துள்ள கர்நாடக அரசிற்கு இந்த அனைத்து சட்டமன்றக் கட்சிக் கூட்டம் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காவிரி விவகாரம் - சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம்
கர்நாடக அணைகளில் தண்ணீர் இருந்தாலும் தமிழகத்திற்கு தண்ணீர் தர கர்நாடக அரசு மறுத்து வருகிறது. இத்ன காரணமாக இரண்டு மாநில அரசுக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளது. இந்த சூழ்நிலையில் காவிரி நீர் ஒழுங்காற்று குழு (CWRC) மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) ஆகிய அமைப்புகள் தமிழ்நாட்டிற்கு பில்லிகுண்டுலுவில் கிடைக்க வேண்டிய நீரினை கணக்கிட்டு 12.07.2024 முதல் 31.07.2024 வரை நாளொன்றுக்கு ஒரு டிஎம்சி நீரை விடுவிக்க வேண்டும் என்று CWRC அமைப்பு ஆணையிட்டுள்ளது. இந்த நிலையில், இந்த ஆணைப்படி தமிழ்நாட்டிற்கு விடுவிக்க வேண்டிய நீரை விடுவிக்க இயலாது என்று கர்நாடக அரசு தெரிவித்திருந்தது. இதற்கு தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
கர்நாடக அரசிற்கு கண்டனம்
இந்த சூழ்நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை செய்ய தமிழக அரசு சார்பாக சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் அறிவிக்கப்பட்டது. இதன் படி இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக சார்பாக எஸ்.பி.வேலுமணி, ஓ.எஸ்.மணியன், காங்கிரஸ் கட்சி சார்பாகசெல்வப்பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் சார்பாக திருமாவளவன், பாரதிய ஜனதா சார்பாக கரு.நாகராஜன் மற்றும் மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட13 கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.
தீர்மானங்கள் என்ன.?
இந்த கூட்டத்தில் 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் காவிரி நடுவர் மன்றம் 05-02-2007 அன்று அளித்த இறுதித் தீர்ப்பையும், மாண்பமை உச்சநீதிமன்றம் 16-02-2018 அன்று அளித்த தீர்ப்பையும் அவமதிக்கும் வகையில், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு தற்போது ஆணையிட்டுள்ளவாறு தமிழ்நாட்டிற்கு காவிரி நீரைத் தர முடியாது என்று மறுத்துள்ள கர்நாடக அரசிற்கு இந்த அனைத்து சட்டமன்றக் கட்சிக் கூட்டம் தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் மாண்பமை உச்சநீதிமன்ற ஆணையின்படி, தமிழ்நாட்டிற்குக் காவிரி நீரை உடனடியாக விடுவித்திட கர்நாடக அரசுக்கு ஆணையிடுமாறு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தினை இந்த அனைத்து சட்டமன்றக் கட்சிக் கூட்டம் வலியுறுத்துகிறது.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் மாண்பமை உச்சநீதிமன்ற ஆணையின்படி, தமிழ்நாடு பெறவேண்டிய நீரை உடனடியாகப் பெறுவதற்கு, தேவைப்படின், மாண்பமை உச்சநீதிமன்றத்தை நாடி, அனைத்து சட்டபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.