கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் நாட் அலவுடு…பால் ஏஜென்டே சொல்லுதுங்க...!

First Published May 31, 2018, 4:25 PM IST
Highlights
Requesting milk agents for Rajini


ரஜினி படம் என்றாலே அவரது ரசிகர்கள் உற்சாகமாகி விடுவார்கள். அவர் படம் வெளியாகும் அன்று, ரஜினியின் கட் அவுட்டுக்கு பூக்களைத் தூவியும், பாலாபிஷேகம் செய்தும் அவரது ரசிகர்கள் மகிழ்வார்கள். 

இந்த நிலையில், ஜூன் 7 ஆம் தேதி காலா திரைப்படம் வெளியாக உள்ளது. காலா படம் வெளியாகும் நிலையில், ரஜினியின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்ய வேண்டாம் என்று தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச்சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், வெயில், மழை, புயல், வெள்ளம், பனி என அனைத்தையும் சகித்துக்கொண்டு உழைப்பிற்கேற்ற ஊதியம் இன்றி உழைத்து வருகின்றோம்.  
தங்களைப் போன்ற முன்னணி நடிகர்கள் மீது ரசிகர்கள் கொண்டிருக்கும் வெறித்தனமான அன்பின் காரணமாக அவர்களின் கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்கின்றனர். இதற்காக நள்ளிரவில் கடைகளின் வாயிலில் வைத்துச் செல்லும் பாலை திருடிச் சென்று விடுகின்றனர்.

இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தால், உங்கள் பொருட்களை நீங்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கைவிரித்து விடுகின்றனர். இதன் காரணமாக பால் முகவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மேலும் சில ரசிகர்கள் கட் அவுட்களுக்கு பால் அபிஷேகம் செய்யும்போது கீழே விழுந்து கை கால்களை உடைத்துக்கொள்வதும், சில நேரங்களில் உயிரிழப்பு ஏற்படுவதும் உண்டு அதனை நீங்களும் அறிவீர்கள்.

இதனை நீங்கள் மனது வைத்தால் தடுக்க முடியும். உயிரற்ற கட்-அவுட்களுக்கு பாலை ஊற்றி வீணடிக்கக்கூடாது. இதற்கு பதில் கண்தானம், உடலுறுப்பு தானம், மது, சிகரெட், போன்றவற்றில் இருந்து விடுபட முகாம்களை நடத்தலாம். இதுகுறித்து திரையரங்க வாசலில் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். என்பது குறித்து கோரிக்கை முன் வைக்கவிருந்தோம். 

இது குறித்து தங்களுடைய ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தலைமை ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் நேரில் சந்தித்து பேசி கோரிக்கை மனு அளித்தோம்.  இது தொடர்பாக உங்களிடம் விரைவாக தெரிவிப்பதாக தெரிவித்தனர். ஆனால் எங்களது கோரிக்கை உங்களின் கவனத்திற்கு வந்ததா? எனத் தெரியவில்லை.

தற்போது தங்களின் படம் வெளிவரவிருப்பத்தால் மீண்டும் ஒருமுறை எங்களின் கோரிக்கையை தெரிவித்துக் கொள்கின்றோம். கட்அவுட்-டில் பாலபிஷேகம் செய்வதற்கு முற்றுப்புள்ளி வைத்து ரசிகர்கள் ஆக்கப்பூர்வமான பணிகளை பெற முயற்சி எடுப்பீர்கள் எனும் நம்பிக்கையோடு காத்திருக்கின்றோம் என தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

click me!