
திருநெல்வேலி
திருநெல்வேலி, வ.உ.சி. மைதானத்தில் நடைப்பெற்ற குடியரசு நாள் விழா ஒத்திகையில் காவலாளர்களின் அணிவகுப்பு, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடைப்பெற்றது. மாவட்டத்தில் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
குடியரசு நாள் விழா
குடியரசு நாள் விழா வருகிற 26–ஆம் தேதி (அதாவது வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. இதனையொட்டி ஒவ்வொரு மாவட்டத்திலும் குடியரசு நாள் விழா நடைபெறுகிறது.
அதன்படி, திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளையங்கோட்டை வ.உ.சி.மைதானத்தில் குடியரசு நாள் விழா நடக்கிறது. அன்று காலை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தேசிய கொடி ஏற்றுகிறார்.
கலை நிகழ்ச்சிகள்
அதனைத் தொடர்ந்து நடக்கும் காவலாளர்களின் அணிவகுப்பு மரியாதையில் காவலாளர்கள், ஊர்காவல்படை, தேசிய மாணவர் படை மாணவ, மாணவிகள் உள்ளிட்டவர்கள் பங்கேற்கின்றனர்.
பின்னர், பல்வேறு துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. இவை அனைத்துக்குமான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.
ஒத்திகை
குடியரசு நாள் விழாவையொட்டி, பாளையங்கோட்டை வ.உ.சி.மைதானத்தில் நேற்று காலை காவலாளர்களின் அணிவகுப்பு ஒத்திகையும் நடைப்பெற்றது. இசை முழக்கத்துடன் உயர் அதிகாரிகள் பின்னர் காவலாளர்கள் அணிவகுத்து சென்றனர். வ.உ.சி.மைதானத்தை சுற்றி வந்து அங்குள்ள கொடிகம்பத்திற்கு மரியாதை செலுத்துவதுபோல ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
இந்த ஒத்திகையில் காவலாளர்கள், ஊர்க்காவல் படை, பெண் காவலாளர்கள், தேசிய மாணவர் படை உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
காவல் பாதுகாப்பு
இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் ஒத்திகை கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்திய நாட்டின் சிறப்புகளை விளக்கும் வகையில் ஆடல், பாடல்கள் நிகழ்ச்சிகளை நடத்தினர்.
குடியரசு நாள் விழாவையொட்டி பாளையங்கோட்டை வ.உ.சி.மைதானத்தில் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.