வீட்டுக்குள் புகுந்த அரசு பேருந்து; உயிரை காப்பாற்றிக்கொள்ள வெளியே குதித்த ஓட்டுநர் தலையில் அடிபட்டு சாவு...

First Published Jan 24, 2018, 7:06 AM IST
Highlights
Government bus hit the house driver who was jump to save his life was dead ...


திருச்சி

திருச்சியில் லாரி மீது மோதியதில் அரசு விரைவு பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து வீட்டுக்குள் புகுந்தது. உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடும் பேருந்தில் இருந்து வெளியே குதித்த ஓட்டுநர் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பயணம்

நேற்று முன்தினம் இரவு சுமார் 12 பயணிகளுடன் சென்னையில் இருந்து அரசு விரைவு பேருந்து ஒன்று செங்கோட்டை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தது. பேருந்தை திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள டி.என்.புதுக்குடியை சேர்ந்த வெங்கடேசன் (27) என்பவர் ஓட்டினார்.

மோதல்

இந்தப் பேருந்து நேற்று காலை திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே உள்ள செவந்தாம்பட்டி விலக்கு என்ற இடத்தில் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, முன்னால் சென்ற லாரியின் பக்கவாட்டில் இலேசாக மோதியது.

வீட்டுக்குள் புகுந்தது

சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர் பேருந்தை திருப்ப முயன்றார். ஆனால், எதிர்பாராதவிதமாக சாலையை விட்டு விலகிச் சென்ற பேருந்து, சிறிது தொலைவில் இருந்த ஒரு வீட்டுக்குள் புகுந்தது.

கணபதி என்பவரின் வீட்டுக்குள்தான் பேருந்து புகுந்தது. அந்த நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

பயணிகள் அலறல்

பலத்த சத்தத்துடன் வீட்டிக்குள் முட்டி நின்ற பேருந்தின் சத்தத்தை கேட்ட தூங்கி கொண்டிருந்த பயணிகள், அலறி அடித்து கொண்டு வெளியே ஓடிவந்தனர். பயணிகளின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர், விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் திருநெல்வேலி மாவட்டம் கட்டளை குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த சுந்தரி (50), அவரது கணவர் சுந்தரம் (62), கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள புதுப்பேட்டையை சேர்ந்த வினோத்குமார் (21) ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.

ஓட்டுநர் சாவு

இந்த விபத்தின்போது பேருந்து ஓட்டுநர் வெங்கடேசன், தான் ஓட்டி வந்த பேருந்து வீட்டுக்குள் புகுந்து விடுவதற்கு முன்பு தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள பேருந்துசில் இருந்து வெளியே குதித்தார். இதில் தலையில் அடிபட்டு அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

வழக்குப்பதிவு

இதுகுறித்த தகவல் அறிந்த துவரங்குறிச்சி காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பேருந்து ஓட்டுநர் வெங்கேடசன் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், இந்த விபத்து குறித்து காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

click me!