
வேலூர்
வேலூரில் நடந்துவரும் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் தொடர்ந்து இரண்டு நாள்களாக சர்வர் பழுது ஏற்பட்டதால் கலந்தாய்வுப் பணி முடங்கியதால் குழந்தைகளுடன் வ் வந்த ஆசிரியர்கள் கடும் அவதிக்கு உள்ளாயினர்.
வேலூர் மாவட்டத்தில், தொடக்கக்கல்வி இயக்ககம் சார்பில், ஆசிரியர்கள் பணி நிரவல், மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு இணையதளம் மூலம் நடக்கிறது.
வேலூர் அண்ணாசாலையில் உள்ள டான்பாஸ்கோ உயர்நிலைப் பள்ளியில் நடக்கும் இந்தக் கலந்தாய்வில் நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடைப்பெற்றது.
அதனைத் தொடர்ந்து பட்டதாரி ஆசிரியருக்கான பணி நிரவல், ஒன்றியத்திற்குள் மற்றும் ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுவதற்கான பொது மாறுதல், பதவி உயர்வு ஆகியவற்றுக்கான கலந்தாய்வு தொடங்கியது.
அந்த சமயத்தில் சர்வர் பழுதடைந்ததால் கலந்தாய்வு இரவு 11 மணி வரை நீடித்தது.
பின்னர், சர்வர் பழுது ஏற்பட்டதால் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு பாதியிலேயே முடித்து வைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலை 9.30 மணியளவில் விடுபட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது.
மறுபடியும் அதே பிரச்சனை. மின் வெட்டு காரணமாகவும், சர்வர் பழுது காரணமாகவும் நேற்று மதியம் வரை கலந்தாய்வு பணி முடங்கியது.
இதுகுறித்து தகவலறிந்த முதன்மை கல்வி அலுவலர் துரைசாமி அங்கு விரைந்து வந்து பார்வையிட்டார்.
சர்வர் பழுது காரணமாக கலந்தாய்வில் காலதாமதம் ஏற்பட்டதால் ஆசிரியர்கள் மிகவும் அவதிப்பட்டனர்.
இதனையடுத்து மதியத்திற்கு மேல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வும், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல், பதவி உயர்வு ஆகியவற்றுக்கான கலந்தாய்வும் நடந்தது.
இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.