
சிவகாசியில் பட்டாசு கொடவுனில் உயிரிந்த 10 பேர் குடும்பத்திற்கு இடைக்கால நிவாரண நிதியாக நவ.25 க்குள் ரூ.3 லட்சம் வழங்கி அது பற்றி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் படி மதுரை ஐகோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
சிவகாசியில் கடந்த 20-ம் தேதி பட்டாசு கடையில் வெடிவிபத்து ஏற்பட்டது. பட்டாசுகளை வாகனத்தில் இருந்து இறக்கும்போது விபத்து ஏற்பட்டது. மளமளவெனப் பரவிய தீ, அருகில் உள்ள ஸ்கேன் சென்டருக்கும் பரவியது.
இதில் பெண்கள் உள்ளிட்ட 10 பேர் பலியாகினர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்த விவகாரத்தை தானாக முன் வந்து வழக்காக பதிவு செய்தது.
இந்த வழக்கு இரண்டு நாட்களாக விசாரணை நடந்து வருகிறது. இதில் பட்டாசு கடை அருகில் ஸ்கேன் செண்டருக்கு அனுமதி அளித்த வருவாய்த்துறை அதிகாரியை நேரில் வரவழைத்து நீதிபதிகள் விசாரணை நடத்தினர். 10 பேர் பலியான சம்பவத்தை சாதாரணமாக விட தயாரக இல்லை என மதுரை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
இவ்வழக்கு இன்று மீண்டும் ஐகோர்ட் மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வெடிவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நிதியுதவியை நவம்பர் 25-ம் தேதிக்குள் வழங்கி, நவம்பர் 28-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்தனர்.
மேலும், இந்த விபத்து குறித்து மாவட்ட எஸ்.பி. தலைமையில் டி.எஸ்.பி. விசாரணை நடத்தவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.