விலங்குகளை வேட்டையாட சென்றவர் மீது துப்பாக்கிச் சூடு.! உடலை வாங்க மறுத்து உறவினர்கள் இரண்டாவது நாளாக போராட்டம்

By Ajmal KhanFirst Published Oct 30, 2023, 1:34 PM IST
Highlights

வனப்பகுதிக்குள் சென்றவர் மீது துப்பாக்கிசூடு நடத்திய வனத்துறையினரை கைது செய்ய கோரி  இறந்தவரின் உடலை வாங்க மறுத்து  உறவினர்கள் இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

வேட்டைக்கு சென்றவர் மீது துப்பாக்கி சூடு

தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரன்(55) இவர் மேகமலை புலிகள் சரணாலயத்திற்கு உட்பட்ட சுருளியாறு மின் நிலையம் அருகே, தடை செய்யப்பட்ட வனப்பகுதியில் நேற்று முன் தினம் இரவு  வனவிலங்குகளை வேட்டையாட சென்றதாக கூறப்படுகிறது. அப்போது வேட்டையை தடுத்த வனத்துறையினரை ஈஸ்வரன் தாக்க முயன்றதாக கூறி வனத்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் அவர் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்  ஈஸ்வரனின் உறவினர்கள் தற்போது இரண்டாவது நாளாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உடலை வாங்க மறுத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உடல் வாங்க மறுத்து போராட்டம்

ஈஸ்வரன் மீது துப்பாக்கி சூடு நடத்திய வனத்துறையினரை கைது செய்ய  வேண்டும் என்று வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பெரியகுளம் கோட்டாட்சியர் முத்துமாதவன் தலைமையில் காவல்துறையினர் வருவாய்த்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பேச்சுவார்த்தையின் முடிவில் தான் இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கு உறவினர்கள் ஒப்புதல் அளிப்பார்களா, சடலத்தை அடக்கம் செய்வதற்கு பெற்றுக் கொள்வார்களா? எனத் தெரியவரும். 

வனத்துறையினர் மீது நடவடிக்கை

ஆனால் துப்பாக்கிச்சூடு நடத்திய வனத்துறையினரை கைது செய்யும்வரை ஈஸ்வரனின் சடலத்தை வாங்கமாட்டோம் என்றும், அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய விடமாட்டோம் என மறுத்தும், அவரது உறவினர்கள் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தரையில் அமர்ந்து,கையில் பதாகைகளை ஏந்தி இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்

வன விலங்குகளை வேட்டையாட சென்றவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வனத்துறை.! சுட்டது ஏன் வெளியான பகீர் தகவல்
 

click me!