
வீரபாண்டி முல்லைப் பெரியாறு தடுப்பணை பகுதியில் பேரிடர் மீட்புப் பணி ஒத்திகை நடைபெற்றது.
வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ளதை முன்னிட்டு, இயற்கை சீற்றங்களில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பது, மீட்புப் பணிகள், முதலுதவி ஆகியவற்றில் அனைத்து அரசுத் துறைகள் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து ஒத்திகை நடைபெற்றது. மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை ரப்பர் படகுகள், டயர், டியூப், கேஸ் சிலிண்டர், காலிக் குடம் ஆகியவற்றை பயன்படுத்தி மீட்புப் பணியில் ஈடுபடுவது குறித்து, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர், காவல் துறையினர், வருவாய்த் துறையினர் ஒருங்கிணைந்த ஒத்திகையில் ஈடுபட்டனர்.
பேரிடர் மீட்புப் பணி ஒத்திகையை, மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வீ. பாஸ்கரன் ஆகியோர் பார்வையிட்டனர். பருவமழை காலத்தில் சாலை மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர் தேங்காமலும், தொற்று நோய் பரவாமலும் தடுப்பதற்கும், நோய் தடுப்பு மருந்துகளை போதிய அளவில் கையிருப்பு வைத்திருக்கவும், மின்கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகளில் மின்கசிவு ஏற்படுவதைக் கண்காணிக்கவும், குடுநீரை சுத்திகரித்து விநியோகம் செய்யவும், கண்மாய்களில் கரை உடைப்பு ஏற்படாமல் பராமரிக்கவும் தேவையான முன்னேற்பாடுகளை செய்ய உள்ளாட்சி அமைப்பு, பொதுச் சுகாதாரத் துறை, மின் வாரியம் மற்றும் பொதுப் பணித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று ஆட்சியர் கூறினார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் செ. பொன்னம்மாள், பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் ஆனந்தி, மாவட்ட தீயணைப்பு அலுவலர் கருப்பையா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.