பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் சம்போ செந்திலைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 24 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சம்போ செந்தில் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த கொலை வழக்கில் 11 பேர் முதலில் போலீசில் சரண் அடைந்தனர். ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கவே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்திருந்தனர். ஆனால் இதனை ஏற்றுக்கொள்ளாத போலீசார் சரண் அடைந்தவர்களிடம் தங்கள் பாணியில் நடத்தப்பட்ட விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
undefined
ஆம்ஸ்ட்ராங் கொலையில் பல முக்கிய நபர்கள், ரவுடிகள் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. மேலும் பல வகையில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய பணம் வசூலிக்கப்பட்டது. ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய சிறையில இருந்தே பிரபல ரவுடி நாகேந்திரன் ஸ்கெட்ச் போட்டதாக கூறப்படுகிறது. இதனை வைத்தே சம்போ செந்தில் இந்த கொலையை அரங்கேற்றியதாக கூறப்படுகிறது.
ரெட் கார்னர் நோட்டீஸ்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தற்போது வரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஆம்ஸ்ட்ராங்கை முதலில் வெட்டிய ரவுடி திருவேங்கடத்தை போலீசார் என்கவுண்டரில் சுட்டு கொலை செய்தனர். இந்தநிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய நபராக கருதப்படும் சம்போ செந்திலை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். வட மாநிலங்களில் தலைமறைவாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் ஏற்கனவே வழங்கப்பட்டது. தற்போது வெளிநாடு தப்பி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து சம்போ செந்திலை கைது செய்யும் வகையில் சர்வதேச போலீஸ் உதவியோடு ரெட் கார்னர் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; குற்றவாளிக்கு ரூ.75 லட்சம் பணம் கொடுத்தேனா? நெல்சன் மனைவி விளக்கம்