வருமானவரி சோதனையில் சிக்கிய தங்கம், பணம் யாருக்கு சொந்தம்...? - ராமதாஸ் கேள்வி

First Published Dec 9, 2016, 11:42 AM IST
Highlights


சென்னையில் நடந்த வருமான வரி சோதனையில் சிக்கிய ரூ.100 கோடி பணம் மற்றும் தங்கம் யாருக்கு சொந்தம் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

வருமான வரித்துறை அதிகாரிகள் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் 3 இடங்களிலும், வேலூரில் நடத்திய சோதனையில் ரூ.105 கோடி பணமும், ரூ.40 கோடி மதிப்புள்ள 25 கிலோ தங்கக்கட்டிகளும் கைப்பற்றப்பட்டன. சமீபகால ஆய்வுகளில் சிக்கிய பெருந்தொகை இதுதான் என்று கூறப்படுகிறது.

ஒரு குழுவினரிடம் நடத்தப்பட்ட சோதனையில் இவ்வளவு பணம் சிக்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

வேலூரை சேர்ந்த தொழிலதிபர் சேகர் ரெட்டி, அவரது நண்பர் சீனிவாச ரெட்டி, இருவரின் முகவர்  பிரேம் ஆகியோரின் இல்லங்கள் மற்றும் அலுவலகங்கள் என மொத்தம் 8 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

அந்த சோதனையில் ரூ.95 கோடிக்கு பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளும், ரூ.10 கோடி அளவுக்கு புதிய ரூ.2000 நேட்டுகளும் கைப்பற்றப்பட்டன. அத்துடன் 125 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

2வது நாளாக இன்றும் சோதனைகள் தொடரும் நிலையில், அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் தங்கத்தின் மதிப்பு மேலும் அதிகரிக்கலாம் என்று வருமான வரி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வேலுரில் உள்ள அவரது இல்லத்தில் ஆள் இல்லாததால் அந்த வீடு மூடி முத்திரையிடப்பட்டுள்ளது. அந்த வீட்டில் சோதனை நடத்தும்போது மலைக்க வைக்கும் அளவுக்கு பணம் கிடைக்கக்கூடும்.

இந்தியாவில் ரூ.500, ரூ.1000 தாள்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்து விட்டது. அதற்குப் பிறகும் ரூ.95 கோடிக்கு பழைய நோட்டுகள் வைத்திருந்தால், கடந்த ஒரு மாதத்தில் அவர்கள் எவ்வளவு பழைய ரூபாய்களை பினாமி பெயர்களில் வைப்பீடு செய்திருப்பார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.

மேலும், ரூ.10 கோடிக்கு ரூ.2000 நோட்டுகள் உள்ளன.  அவை அனைத்தும் 1 முதல் 100 வரை வரிசை எண் கொண்ட கட்டுக்களாக பதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.

நாடு முழுவதும் புதிய ரூபாய் தாள்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. ரூ.2000 எடுப்பதற்காக ஏ.டி.எம். வாசல்களில் கோடிக்கணக்கான மக்கள் மணிக் கணக்கில் காத்திருக்கின்றனர்.

வாரத்திற்கு ரூ.24,000 எடுத்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தாலும் வங்கிகளில் பணம் இல்லாததால் அந்த அளவுக்கு எடுக்க முடியவில்லை. அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு நவம்பர் மாத ஊதியம் கடந்த 30ம் தேதி அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு விட்ட நிலையில், 10 நாட்களாகியும் இன்னும் பாதி பணத்தைக் கூட எடுக்க முடியவில்லை.

இந்நிலையில் மொத்தமாக ரூ.10 கோடிக்கு புதிய 2,000 ரூபாய் நோட்டுகளை ஒருவர் குவித்து வைத்திருந்தால், அது வங்கி அதிகாரிகள் ஒத்துழைப்பின்றி சாத்தியமில்லை.

வருமானவரி சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட சேகர் ரெட்டி, சீனிவாச ரெட்டி, பிரேம் ஆகியோரில் முதன்மையானவர் சேகர் ரெட்டி தான். மற்றவர்கள் அவரின் உதவியாளர்கள்.

இந்த சேகர் ரெட்டி சாதாரணமானவர் அல்ல. தமிழக அரசியலில் அதிமுக, திமுக ஆகியவற்றின் மூத்த தலைவர்களுடன்  நெருக்கமான தொடர்பு வைத்திருப்பவர். தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், சேகர் ரெட்டியும் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள்.

முதலமைச்சர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வத்துடன் போட்டியிட்ட எடப்பாடி பழனிச்சாமியும் சேகர் ரெட்டிக்கு நெருக்கமானவர். கடந்த ஆட்சியிலும், இந்த ஆட்சியிலும்  இவர்களின் ஆளுகையில் உள்ள பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை ஆகியவற்றின் ஒப்பந்தங்கள் யாருக்கு? என்பதை சேகர் ரெட்டி தான் தீர்மானிக்கிறார்.

தமிழகம் முழுவதும் மணல் அள்ளும் ஒப்பந்தம், கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பல சாலைப்பணிகளை சேகர்ரெட்டி செய்து வருகிறார்.

கடந்த ஆட்சியில் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்த காலகட்டத்தில் தான் திருமலை - திருப்பதி  தேவஸ்தான உறுப்பினராக தமிழக அரசு பரிந்துரைப்படி சேகர் ரெட்டி நியமிக்கப்பட்டார்

 பன்னீர்செல்வத்தை அடிக்கடி திருப்பதிக்கு அழைத்து செல்லும் பணியையும் அவர் தான் கவனித்துக் கொள்கிறார் என்பதில் இருந்து ஆட்சியாளர்களுக்கு அவர் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறார் என்பதை உணரமுடியும்.

வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக வளாகத்தில் நெடுஞ்சாலையை ஒட்டிய 1.50 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் இருந்தே அரசு நிர்வாகத்தில் இவருக்கு இருந்த செல்வாக்கை புரிந்து கொள்ளலாம்.

முதலமைச்சருக்கும், அமைச்சர்களுக்கும் அனைத்துமாக இருந்த சேகர் ரெட்டி, தமது தொடர்புகளின் மூலம் கருப்பு பணத்தை வெள்ளையாக்கி கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இது உண்மையானதாக இருந்தால், பறிமுதல் செய்யப்பட்ட பணமும், தங்கக் கட்டிகளும் தமிழகத்தின் ஆட்சியாளர்களுக்கு சொந்தமானதாக இருக்கலாம் என்ற யூகத்தை எளிதில் புறந்தள்ளி விட முடியாது.

அண்மையில் ஈரோடு, பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட வருமானவரி சோதனையில், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர்களிடம் இருந்து ரூ. 5.7 கோடி மற்றும், தங்க நகைகள், சொத்துப்பத்திரம் உட்பட ரூ.152 கோடி சிக்கியது.

இதுதொடர்பாக அமைச்சரின் உறவினர் ராமலிங்கத்தின் மகன் கைது செய்யப்பட்டிருக்கிறார். இவற்றையெல்லாம் வைத்துப்பார்க்கும்போது அமைச்சர் பதவியை பயன்படுத்தி ஊழல் செய்த பணத்தை வெள்ளையாக மாற்றும் முயற்சியிலும், தங்கம் மற்றும் சொத்துக்களை வாங்கி குவிக்கும் முயற்சியிலும் ஆட்சியாளர்கள் ஈடுபட்டிருப்பதையும், அதற்கான கருவிகளாக சேகர் ரெட்டி உள்ளிட்டோர் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

எனவே, சேகர் ரெட்டி, ராமலிங்கம் உள்ளிட்டோரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணம் யாருக்கு சொந்தமானது? என்பது பற்றி விசாரணை நடத்த மத்திய அரசு ஆணையிட வேண்டும்.

புதிய ரூபாய் தாள்கள் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், சேகர் ரெட்டிக்கு ரூ.10 கோடிக்கான புதிய ரூ.2000 நோட்டுகளை வழங்கிய வங்கி அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

click me!