இனி லெவல் கிராசிங்கே இல்லை; எல்லாம் சப்வே தான்…

First Published Dec 9, 2016, 11:37 AM IST
Highlights


புதுக்கோட்டை,

இன்னும் மூன்று ஆண்டுகளுக்குள், அனைத்து லெவல் கிராசிங்குகளும் மூடப்பட்டு சப்வே (சுரங்கப்பாதை) அமைக்கப்பட உள்ளது என புதுக்கோட்டையில் மதுரை கோட்ட இரயில்வே மேலாளர் சுனில்குமார் கார்கே கூறினார்.

புதுக்கோட்டை இரயில் நிலையம் மதுரை கோட்டத்தைச் சேர்ந்தது. இந்த நிலையில் புதுக்கோட்டை இரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை மதுரை கோட்ட இரயில்வே மேலாளர் சுனில்குமார் கார்கே நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் இரயில் நிலையம் முன்பு நடைபெற்று வரும் வாகன நிறுத்துமிடம் அமைக்கும் பணி, கட்டப்பட்டு வரும் அலுவலர்கள் குடியிருப்பு, இரயில் நிலையத்தில் உள்ள குடிநீர் வசதி, கழிவறை வசதி ஆகியவை முறையாக உள்ளதா என்பது உள்பட பல்வேறு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து மதுரை கோட்ட இரயில்வே மேலாளர் சுனில்குமார் கார்கே தனியார் பாலிடெக்னிக் சார்பில் புதுக்கோட்டை இரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டு உள்ள கால அட்டவணையை திறந்து வைத்தார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அதில், “சென்னையில் இருந்து புதுக்கோட்டை வழியாக மானாமதுரை வரை செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் இரயில் செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட உள்ளது. இதே போல மதுரை இரயில்வே கோட்டத்தில் இருந்து குளிர்கால சிறப்பு இரயில்கள் இயக்கப்பட உள்ளன. குறிப்பாக சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

மதுரை இரயில்வே கோட்டத்தில் ஆள் உள்ள மற்றும் ஆளில்லா இரயில்வே கிராசிங்கே இல்லாத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இன்னும் 2 அல்லது 3 ஆண்டிற்குள் அனைத்து லெவல் கிராசிங்குகளும் மூடப்பட்டு சப்வே (சுரங்கப்பாதை) அமைக்கப்பட உள்ளது. இதனால் விபத்துகள் தவிர்க்கப்படும்.

இரயில்வே மேம்பாலங்களை பொறுத்தவரை இரயில்வே துறை தமிழக அரசு மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் ஆகியவை சம்பந்தப்பட்டு உள்ளதால் பணிகள் தொடங்குவதற்கு காலதாமதம் ஏற்படுகிறது” என்று அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது ரெயில் நிலைய அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

click me!