பேருந்து மோதியதில், சைக்கிளில் சென்ற 10 வயது சிறுவன் பலி; உறவினர்கள் மறியல்…

First Published Dec 9, 2016, 11:35 AM IST
Highlights


பெரம்பலூர்,

பெரம்பலூரில் அரசு பேருந்தி மோதியதில், சைக்கிளில் சென்ற 10 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவர், சிங்கப்பூருக்குச் சென்று அங்கு கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி வீரவனிதா. இவர்களுடைய மகன் கவிராஜ் (10). இவன் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று கவிராஜ் தனது நண்பர்களுடன் துறைமங்கலம் பகுதியில் விளையாடினான். பின்னர் அவன் தனது நண்பனை சைக்கிளில் அழைத்து சென்று அப்பகுதியில் இறக்கி விட்டான்.

துறைமங்கலம் நேரு காம்ப்ளக்ஸ் அருகே சாலையை கடந்து செல்வதற்காக கவிராஜ் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்தான்.

அப்போது, சென்னையில் இருந்து பெரம்பலூர் வழியாக திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக கவிராஜ் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் அரசு பேருந்தின் சக்கரத்தில் சிக்கி கவிராஜ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

இந்த விபத்தை நேரில் கண்டவர்கள் அந்த அரசு பேருந்தை பிடிக்க முயன்றனர். ஆனால் பேருந்தை நிறுத்தாமல் ஓட்டுநர் ஓட்டிச் சென்றார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கவிராஜின் தாய் வனிதா மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, கவிராஜ் உடலை பார்த்து கதறி துடித்தனர்.

இந்த விபத்தை நேரில் கண்டு ஆத்திரமடைந்த பொதுமக்கள் துறைமங்கலம் சாலையில் கற்களை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், துறைமங்கலம் பகுதியில் விபத்தினை தடுக்கும் பொருட்டு வேகத்தடை அமைக்க வேண்டும், அதிக வேகத்தில் செல்லும் வாகனங்களை காவலாளர்கள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும், பெரம்பலூர் காவல் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பெரியசாமி, ராஜா உள்ளிட்ட காவலாளர்கள் விரைந்து வந்தனர்.

பின்னர், அவர்கள், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதற்கிடையே, கவிராஜின் உடலை காவலாளர்கள் கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது பொதுமக்கள் ஆம்புலன்சை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் காவலாளர்கள் பொதுமக்களை சமாதானப்படுத்தினர்.

இதையடுத்து ஆயுதப்படை காவலாளர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்கள் சாலையில் போடப்பட்டிருந்த கற்களை அகற்றினர். அதன்பிறகு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் காவலாளர்கள் வழக்குப்பதிவு செய்து அரசு பேருந்து ஓட்டுநர் காஞ்சீபுரத்தை சேர்ந்த ஜோதிபிரகாசத்தை (52) கைது செய்தனர். மேலும் இந்த விபத்து குறித்து காவலாளர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சைக்கிள் மீது அரசு பேருந்து மோதியதில் சிறுவன் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

click me!