பெற்றோர்களை கைவிட்ட பிள்ளைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தயார் - ஆறுதல் தரும் ஆட்சியர் வார்த்தை...

Asianet News Tamil  
Published : Jun 20, 2018, 10:09 AM ISTUpdated : Sep 19, 2018, 02:32 AM IST
பெற்றோர்களை கைவிட்ட பிள்ளைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தயார் - ஆறுதல் தரும் ஆட்சியர் வார்த்தை...

சுருக்கம்

Ready to take legal action on child who left their parents - collector

கரூர் 

பிள்ளைகள் கைவிட்டுவிட்டால் நடவடிக்கை எடுக்க மூத்த குடிமக்கள் பாதுகாப்பு உரிமை சட்டம் உள்ளது. எனவே, தேவைப்படுவோருக்கு மாவட்ட நிர்வாகம் உதவி செய்ய தயாராக உள்ளது என்று ஆட்சியர் அன்பழகம் தெரிவித்தார்.

முதியோர் இல்லம் அதிகளவில் தோன்றி வருவது சமுதாயத்திற்கு ஆரோக்கியமானது அல்ல என கருத்தரங்கில் கரூர் கலெக்டர் அன்பழகன் பேசினார்.

கரூர் மாவட்டம், தாந்தோன்றி மலைப் பகுதியிலுள்ள அரசு கலைக் கல்லூரியில் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தையொட்டி கருத்தரங்கம் நடந்தது. 

கருத்தரங்கிற்கு முன்ந்தாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து முதியோர்களுக்கு எதிராக கொடுஞ்செயல் எதிர்ப்பு தின ஊர்வலத்தை ஆட்சியர் அன்பழகன் தொடங்கி வைத்தார். 

இந்த ஊர்வலமானது தாந்தோன்றிமலை பகுதி வழியாக சென்றது. கையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக்கொண்டு அரசு கல்லூரி மாணவ - மாணவிகள் பங்கேற்றனர். ஊர்வலம் அரசு கல்லூரி வளாகத்தில் நிறைவுப் பெற்றது. 

பின்னர் தொடங்கிய கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியர் அன்பழகன் பங்கேற்று பேசினார். அப்போது அவர், "மூத்த குடிமக்கள் நம் நாட்டின் சொத்து. அவர்களை பேணி பாதுகாப்பது நமது கடமை. அவர்களது அனுபவங்கள் ஒவ்வொரு காலக் கட்டத்திலும் நமக்கு தேவைப்படுகிறது. 

தங்களது வாழ்வியல் அனுபவத்தின் மூலம் வீட்டிலிருக்கும் இளையோருக்கு ஒழுக்கத்தினை அவர்கள் கற்றுக் கொடுக்கின்றனர். பெற்றோர் இருக்கும்போது மதித்து பாதுகாக்காமல் அவர்கள் இறந்த பின்பு அவர்களின் புகைப்படத்தை வைத்து மாலையிட்டு மரியாதை செலுத்துவதில் எந்த ஒரு புண்ணியமும் இல்லை.

முதியோர் இல்லம் அதிகளவு தோன்றுவது நம் சமுதாயத்திற்கு ஆரோக்கியமானதல்ல. மூத்த குடிமக்களைப் பாதுகாக்கவும், தனது பிள்ளைகள் கைவிட்டுவிட்டால் நடவடிக்கை எடுக்கவும் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு உரிமை சட்டம் உள்ளது. தேவைப்படுவோர் அதை பயன்படுத்திக்கொள்ள மாவட்ட நிர்வாகம் உதவி செய்ய தயாராக உள்ளது.

முதிர்காலத்தில் உடலில் வலிமை குறையும். குழந்தைகள் கைவிட்டுவிட்டால் மன வலிமையும் குறைந்துவிடும். சாலையை கடக்க உதவுவது, பேருந்தில் இடம் கொடுப்பது என்று ஒரு நாள் முதியோருக்கு உதவி செய்துவிட்டு அதனை நினைத்து பெருமிதம் கொள்ளக்கூடாது. 

வாழ்நாள் முழுவதும் முதியோருக்கு உதவுவதை எண்ணமாக கொண்டு செயல்பட வேண்டும். இதன் மூலம் சமூகத்தில் மனிதாபிமானம் தழைத்தோங்கும்" என்று அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், கல்லூரி முதல்வர் ஜோதிவெங்கடேஷ்வரன், மாவட்ட சமூக நல அதிகாரி வள்ளியம்மை, வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, வட்டாட்சியர் கலியமூர்த்தி, சமூகநல பாதுகாப்பு அதிகாரி பார்வதி உள்பட பலர் பங்கேற்றனர்.


 

PREV
click me!

Recommended Stories

திருப்பூரையே குப்பை நகரமாக மாற்றும் திமுக! இடுவாய் குப்பை கிடங்கிற்கு அண்ணாமலை கடும் கண்டனம்!
5.5 லட்சம் கோடி கடன்.. தமிழக மக்களை கடனாளியாக்கிய முதல்வர் ஸ்டாலின்.. இபிஎஸ் விமர்சனம்!