பட்டியல் சாதியைச் சேர்ந்த பெண் சமைத்த உணவைத் தங்கள் குழந்தைகளுக்கு வழங்கக்கூடாது என்று கூறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எட்டையாபுரம் அருகே உள்ள உசிலம்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 11 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் சமையலராக உசிலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின பெண் பணியமர்த்தப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், பட்டியலின பெண் சமைத்தால் தங்களது குழந்தைகள் காலை உணவு சாப்பிட மாட்டார்கள் என்று கூறி பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அண்மையில், கரூரில் உள்ள ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பட்டியலின பெண் சமைத்த உணவை தங்கள் பிள்ளைகள் சாப்பிட மாட்டார்கள் என்று எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் பிறகு மன்னிப்பு கோரிய நிலையில், கோவில்பட்டி அருகே நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து கோவில்பட்டி கோட்டாட்சியர் ஜேன் கிறிஷ்டி பாய் தலைமையில் அதிகாரிகள் அந்த பள்ளிக்கு நேரில் சென்று பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது காலை உணவு திட்ட சமையலரை இடமாற்றம் செய்ய வேண்டும் என பெற்றோர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து, தூத்துக்குடி எம்.பி கனிமொழி சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று சக மாணவர்களுடன் அமர்ந்து உணவு உண்டார். பின்னர் கிராம மக்களிடம் இதுகுறித்து கேட்டறிந்தார். அப்போது, இங்கு நடந்தது தனிப்பட்ட ஒருவரின் பிரச்னை தான். இதில் சாதிப் பிரச்னை என்றும் எதுவும் இல்லை. எங்கள் கிராமத்தில் தீண்டாமை என்ற சொல்லுக்கே இடமில்லை என்று ஊர் மக்கள் தெரிவித்தனர்.
தேச துரோக சட்டத்தை எதிர்த்த வழக்குகள்: அரசியலமைப்பு அமர்வுக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை!
இந்த நிலையில், பட்டியல் சாதியைச் சேர்ந்த பெண் சமைத்த உணவைத் தங்கள் குழந்தைகளுக்கு வழங்கக்கூடாது என்று கூறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “பட்டியல் சாதி அல்லது பட்டியல் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை பொது மக்களின் பார்வைக்குரிய எந்த இடத்திலும் அவமானப்படுத்தும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதிப்பது அல்லது மிரட்டுவது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 3 (r) இன் கீழ் குற்றமாகும். அதைச் செய்தவருக்கு 6 மாதம் முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கலாம்.
பட்டியல் சாதியைச் சேர்ந்த பெண் சமைத்த உணவைத் தங்கள் குழந்தைகளுக்கு வழங்கக்கூடாது என்று பொது இடத்தில் கூறியவர்கள் மேற்குறிப்பிட்ட சட்டப் பிரிவின்கீழ் குற்றம் இழைத்துள்ளனர். அந்தக் குற்றத்துக்கு அங்கிருந்த அதிகாரிகளே சாட்சி.
குற்றம் செய்தவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்துவதும், அங்கே அந்தக் குற்றவாளிகள் தமது பேச்சின்மூலம் மீண்டும் பட்டியல் சமூக மக்களை அவமதிப்பதும் சட்டத்தையும் நீதியமைப்பையும் பொருளற்றதாக்குகிறது. தமிழ்நாடு அரசு இந்த அணுகுமுறையைக் கைவிட்டு, சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவேண்டும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.