
ஈரோடு
ஈரோட்டில் டேங்கர் லாரிக்குள் இரகசிய அறைகள் வைத்து அதில் வேறு மாநிலங்களுக்கு கடத்த முயன்ற நான்கு டன் ரேசன் அரிசியை காவலாளர்கள் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த பருவாச்சி, அம்மன்பாளையத்தில் ஒதுக்குப்புறமான காட்டுப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தண்ணீர் டேங்கர் லாரியில் அரிசி மூட்டைகள் ஏற்றப்பட்டு, கேரளம், கர்நாடக மாநிலங்களுக்கு கடத்தப்படுகிறது என்ற தகவல் காவலாளர்களுக்கு இரகசியத் தகவல் கிடைத்தது.
அதனையடுத்து, அந்தியூர் காவல் ஆய்வாளர் ரவி, உதவி ஆய்வாளர் ஆனந்தகுமார் மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று நேற்று திடீரென சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த டேங்கர் லாரியில் அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்த நால்வர், காவலாளர்களைப் பார்த்ததும் காட்டுக்குள் தப்பியோடினர். பின்னர், அருகிலிருந்த வீட்டில் சோதனை நடத்தியபோது மூட்டை, மூட்டையாக அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து, அப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் நான்கு டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், டேங்கர் லாரி, கார் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
லாரியில் சோதனை நடத்தப்பட்டதில், அதில் ரகசிய அறைகள் அமைக்கப்பட்டு, அரிசி மூட்டைகள் பாதுகாப்பாக ஏற்றிச் செல்லப்பட்டு வந்தது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மாவட்ட நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் ஒப்படைக்கப்பட்டது.