கஞ்சா பதுக்கி வைத்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் நடத்திய சோதனையில் 6 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஒருவரிடம் விசாரித்து வருகின்றனர்.
கஞ்சா பதுக்கி வைத்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் நடத்திய சோதனையில் 6 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஒருவரிடம் விசாரித்து வருகின்றனர்.
நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட மயிலாப்புரத்தில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக பாளையங்கோட்டை போலீசாருக்கு, ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார், அப்பகுதிக்கு சென்று தீவிரமாக கண்காணித்தனர். அப்போது, அங்குள்ள ஒரு வீட்டில் மூட்டைகளுடன் வரும் சிலர், திரும்பி செல்லும்போது வெறும்கையோடு செல்வதை பார்த்தனர். உடனே போலீசார், அதிரடியாக அந்த வீட்டில் நுழைந்து சோதனை செய்தனர்.
அதில், அங்குள்ள ஒரு அறையில் ஏராளமான மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அதை பிரித்து பார்த்தபோது, ரேஷன் அரிசியை பதுக்கி வைத்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த 6 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும், இதுதொடர்பாக கொம்பையா என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர். இது குறித்து குடிமைபொருள் வழங்கல் துறை போலீசாரும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.