
விருதுநகர்
விருதுநகரில் சாலையில் மூட்டை மூட்டையாக அனாமத்தாக கிடந்த ரேசன் அரிசிகளை தகவலின்பேரில் குடிமைப் பொருள் வழங்கல் வட்டாட்சியர் பறிமுதல் செய்தார். கடத்தியவர்களை காவலாளர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் இருந்து ஆவரம்பட்டி செல்லும் வழியில் ரேசன் அரிசி மூட்டைகள் இருக்கிறது என்று குடிமைப் பொருள் வழங்கல் வட்டாட்சியருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் ராஜபாளையம் குடிமைப் பொருள் வழங்கல் வட்டாட்சியர் சீனிவாசன், சிறப்பு வருவாய் ஆய்வாளர் சுந்தர்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்றனர்.
அவர்களுக்கு கிடைத்த தகவலின்படி குறிப்பிட்டு இருந்த இடத்தில் பத்து மூட்டைகள் ரேசன் அரிசி அனாமத்தாகக் கிடந்தன. அவற்றை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடிமைப் பொருள் வழங்கல் வட்டாட்சியர் சீனிவாசன் அவற்றைக் கைப்பற்றினர்.
பின்னர், அந்த மூட்டைகளை பரிசோதித்ததில், கோழி தீவனம் போன்று கலப்படம் செய்து, கோழிப் பண்ணைகளுக்கு ரேசன் அரிசியை கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.
மூட்டைகள் ஏன் அந்த இடத்தில் போடப்பட்டன? யார் கடத்த முயன்றார்கள் போன்றவற்றை காவலாளர்கள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.