
சிவகங்கை
வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலால் சிவகங்கைகயில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் முதலில் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பின்னர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்கு செல்கின்றனர். அங்கு 'டெங்கு' தாக்கியிருப்பது உறுதிச் செய்யப்பட்ட பிறகு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருகின்றனர்.
இம்மாவட்டத்தில் தமறாக்கி அருகே உள்ள சிவல்பட்டி கிராமத்திலும், அதைச் சுற்றியுள்ள ஊர்களிலும் வீட்டிற்கு ஒருவர் வீதம் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அதன்படி, காரைக்குடியில் இருவர், மானாமதுரையில் இருவர், புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து டெங்கு காய்ச்சல் முற்றிய நிலையில் அனுமதிக்கப்பட்ட ஒரு சிறுவன் உட்பட மொத்தம் 5 பேர் பலியாகி உள்ளனர். மேலும், மாவட்டம் முழுவதும் 1000-க்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது காரைக்குடி, கல்லல், இளையான்குடி, மானாமதுரை பகுதியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இப்பகுதியில் இருந்து தினமும் 25 பேர் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர்.
டெங்குவால் பாதிக்கப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவரிடம் எடுக்கப்படும் இரத்த பரிசோதனையில் டெங்கு காய்ச்சல் என குறிப்பிடுவதில்லை. அதற்கு பதிலாக வைரஸ் காய்ச்சல், விஷக் காய்ச்சல் என்று மட்டுமே கூறி வார்டுகளுக்கு அனுப்பி சிகிச்சை அளிக்கின்றனர்.
தனியார் மருத்துவமனைகளில் டெங்கு என்று உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவமனைகு வந்தால் அங்கு டெங்கு இல்லை, மர்ம காய்ச்சல் என்று தெரிவித்து சிகிச்சை அளிக்கின்றனர். இறுதியில், சிகிச்சை பலனின்றி மர்ம காய்ச்சலால் உயிரிழந்தார் என்று தெரிவிக்கின்றனர் என்று டெங்குவால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவரின் உறவினர் தெரிவித்தார்.