
விருதுநகர்
மேல்மருவத்தூர் கோவில் மற்றும் அதன் நிறுவனர் குறித்த டிராபிக் ராமசாமியின் வீடியோ கருத்தால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செவ்வாடை அடியார்கள் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் பீடம் செய்த அட்டூழியங்களை வீடியோ பதிவாக டிராஃபிக் ராமசாமி வெளியிட்டார். அதனால், மேல்மருவத்தூர் அடியார்கள் மிரண்டு போயிருக்கின்றனர். இதனால், டிராபிக் ராமசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சிவகாசி காக்கிவாடன்பட்டியைச் சேர்ந்த பரமேஸ்வரி என்பவர் தலைமையில் செவ்வாடை அடியார்கள் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பது:
“கடந்த மாதம் 28–ஆம் தேதி டிராபிக் ராமசாமி சமூக வலைதளங்களில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக குரு மற்றும் பெண் அடியார்கள் ஆகியோரைப் பற்றி அவதூறாக பேசியுள்ளார்.
மேலும் கோவிலையும், கோவில் நிர்வாகம் நடத்தும் கல்லூரிகளையும் மேல்மருவத்தூர் இரயில் நிலையத்தையும் மூடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
பெண் அடியார்களை ஏளனம் செய்தும், இழிவுபடுத்தியும் அவர் பேசியுள்ளார். இதனால் பெண்கள் மிகவும் மன வேதனை அடைந்துள்ளனர். உண்மையான ஆன்மிகவாதிகளையும் அவர் இழிவுபடுத்தி உள்ளார். இதனால் எங்களுக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.
எனவே, டிராபிக் ராமசாமி மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்து அவர் மீது நடவடிக்கை எடுப்பதுடன் சமூக வலை தளங்களில் பெண் அடியார்கள் பற்றி அவதூறாக உள்ள பகுதிகளை முடக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.