
வேலூர்
இரண்டு மாதங்களாக குடிநீரில் சாக்கடை தண்ணீர் கலந்து வருவதாலும், புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததாலும் உச்ச கட்ட கோவமடைந்த பொதுமக்கள் வெற்றுக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் சைதாப்பேட்டையில் குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதால் பொதுமக்கள் வெற்றுக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் சைதாப்பேட்டை 28–வது வார்டில் மாநகராட்சி சார்பில் வாரத்துக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
கடந்த இரண்டு மாதங்களாக குடிநீருடன் சாக்கடை நீர் கலந்து வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் வேலூர் மாநகராட்சி அதிகாரிகளிடத்தில் புகார் அளித்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று காலையும் வழக்கம்போல குடிநீர் விநியோகம் செய்யப்பட்டபோது குடிநீரில், கருப்பு நிறத்தில் சாக்கடை நீர் கலந்து வந்துள்ளது. இதனால் சினம் கொண்ட பொதுமக்கள் வெற்றுக் குடங்களுடன் சைதாப்பேட்டை பிராதன சந்தைக்குத் திரண்டு வந்தனர்.
அவர்கள் கோடையிடி குப்புபசாமி மாநகராட்சி மேல்நிலை பள்ளி அருகில் வெற்றுக் குடங்களுடன் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம் செய்தனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் வேலூர் வடக்கு காவலாளர்கள் சென்று மறியல் செய்த பொதுமக்களுடன் பேசி மறியலை கைவிட கோரினர். இதனால் காவலாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து போக்குவரத்து காவல் ஆய்வாளர் சீதாராமன் பொதுமக்களுடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து மறியலை கைவிட்டனர்.