
மீனவர் படுகொலைக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் நேரில் வந்து பதிலளிக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று தங்கச்சிமடம் போராட்டக் குழுவினர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
தனுஷ்கோடி ஆதம்பாலம் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 21 வயதான பிரிட்ஜோ என்பவர் கழுத்தில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயரிழந்தார்.
இந்த சம்பவம் ராமநாதபுரம் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சர் நேரில் வந்து விளக்கம் அளிக்கும் வரை பிரிட்ஜோவின் உடலை வாங்க மாட்டோம் என்று மீனவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தங்கச்சிமடம் தேவாலயம் அருகே போராட்டம் நடத்த அப்பகுதி மக்கள் தயாராகி வருகின்றனர். மாவட்டம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.