வெள்ளத்தில் மக்கள் தவிக்கும் நிலையில் டாஸ்மாக் பார்களை ஏலம் விடுவது தான் அரசுக்கு முக்கியமா.? சீறும் ராமதாஸ்

By Ajmal Khan  |  First Published Dec 11, 2023, 12:53 PM IST

சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்கள் பெரும் சோகத்திலும், வேதனையிலும் ஆழ்ந்துள்ள நிலையில், குடிப்பகங்களை ஏலத்தில் விடுவது பொறுப்புள்ள அரசுக்கு அடையாளம் அல்ல என ராமதாஸ் தெரிவித்துள்ளார். 
 


சென்னையில் வெள்ள பாதிப்பு-பார்கள் ஏலம்

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 7 டாஸ்மாக் மாவட்டங்களில் உள்ள 720 மதுபான பார்களுக்கு ஒப்புந்தபுள்ளி இன்றும்,நாளையும் திறப்பதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் தான் மிக்ஜம் புயலால் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளத்தால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் ஆகும்.  இந்த மாவட்டங்களின் பல இடங்களில் இன்னும் வெள்ளம் வடியவில்லை. மக்களுக்கு உணவு கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்ட பல பகுதிகளை இன்னும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளால் பார்வையிட முடியவில்லை. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள  அதிகாரிகள் இல்லை. 

Tap to resize

Latest Videos

மீட்புப் பணிகளில் தமிழக அரசு தோல்வி

இத்தகைய சூழலில் வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்வதை விடுத்து, டாஸ்மாக் குடிப்பகங்களின் ஏலத்தை நடத்துவது தான் முக்கியம் என்று அரசு கருதுகிறதா?  மாவட்ட நிர்வாகங்களை பார் ஏலப் பணிகளில் முடக்க நினைக்கிறதா? மழை - வெள்ள  முன்னெச்சரிக்கை மற்றும் மீட்புப் பணிகளில் தமிழக அரசு தோல்வியடைந்து விட்டதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை அவர்களின் வீடுகளில் குடியமர்த்துவது, நிவாரண உதவிகளை வழங்குவது  உள்ளிட்ட பணிகள் இப்போது மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்தப் பணிகளை ஒருங்கிணைக்க வேண்டியதில் பெரும்பங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்குத் தான் உண்டு. அவ்வாறு இருக்கும் போது அந்தப் பணிகளை ஒதுக்கி வைத்து விட்டு, டாஸ்மாக் குடிப்பகங்களுக்கு உரிமம் வழங்கும் பணியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை முடக்க வேண்டிய தேவை என்ன?

பார்கள் ஏலத்தை தமிழக அரசு ரத்து செய்திடுக

மதுக்கடைகளை நடத்துவதோ,  அவற்றுக்கு இணையாக குடிப்பகங்களை  ஏலம் விடுவதோ அரசின் வேலை அல்ல. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்கள் பெரும் சோகத்திலும், வேதனையிலும் ஆழ்ந்துள்ள நிலையில், குடிப்பகங்களை ஏலத்தில் விடுவது பொறுப்புள்ள அரசுக்கு அடையாளம் அல்ல. தமிழ்நாட்டில் உடனடியாக ஒரே கட்டமாகவோ, படிப்படியாகவோ மதுவிலக்கை ஏற்படுத்துவது தான் அரசின் நோக்கமாக இருக்க வேண்டும். அது தான் மக்கள்நல அரசுக்கு அழகு.

வெள்ள நிவாரணப் பணிகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு, குடிப்பகங்களுக்கு முக்கியத்துவம் அளித்தால் தமிழ்நாட்டு மக்களின் கோபத்திற்கு அரசு ஆளாக நேரிடும். எனவே,  சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில்  இன்றும் நாளையும் நடைபெறவுள்ள  குடிப்பகங்கள்  ஏலத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.  அதற்கு மாறாக, வெள்ள நிவாரணப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இதையும் படியுங்கள்

மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்பு..! இன்று ஆய்வை தொடங்கும் மத்திய குழு- எப்போது அறிக்கை தாக்கல் செய்யும் .?

click me!