
கறுப்புப் பண ஒழிப்பு நடவடிகையில் நாடு முழுவதும் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி ஆய்வுகளில் பல ஆயிரம் கோடி ரூபாய்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன ராவ் வீடு மற்றும் தலைமைச் செயலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பல முக்கிய ஆவணங்கள கைப்பற்றப்பட்டன. தமிழக வரலாற்றில் இல்லாத அளவுக்கு தலைமைச் செயலகத்திலேயே வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது,
ராம மோகன ராவின் மகன் விவேக் நடத்தப்பட்ட சோதனையில் 18 லட்சம் ரூபாய் அளவுக்கு புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் அங்கு கைப்பற்றப்பட்ட நகைகளை மதிப்பிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் விவேக் அலுவலகத்தில் நடைபெற்று வந்த சோதனை இன்று அதிகாலை 3 மணி வரை நடைபெற்றது.
இதனையடுத்து ராம மோகன ராவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 16 கோடி ரூபாய் அளவுக்கு அவர் வரி ஏய்ப்பு செய்ததாக ஒப்புக்கொண்டதாக வருமான வரித்துறையினர் தெரிவித்தனர். இதனையடுத்து ராம மோகன ராவ் தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அவர் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் மீது அடுத்த நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.