
தமிழக தலைமை செயலராக பதவி வகித்த ராம மோகன ராவின் மகன் விவேக்கிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதையடுத்து இன்று அவர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை அண்ணா நகரில் உள்ள, ராமமோகன ராவ் வீடு மற்றும் அலுவலகத்தில், வருமான வரித் துறையினர் நேற்று முன் தினம் அதிரடி சோதனை நடத்தினர்.
மேலும் ,திருவான்மியூரில் உள்ள, அவரது மகன் விவேக்கிற்கு சொந்தமான பங்களா; தேனாம்பேட்டையில் உள்ள, 'விர்ச்சு என்ற விவேக்குக்கு சொந்தமான நிறுவனம் ஆகியவற்றிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் விவேக்கிற்கு சம்மன் அனுப்பியுள்ளனர். நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் இன்று மாலை நேரில் ஆஜராக விவேக்கிற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சோதனையின் போது சிக்கிய முக்கிய ஆவணங்கள் குறித்து அவரிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து இன்று மாலை அவர் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.