செங்கல்பட்டு சார் ஆட்சியரை கண்டித்து பேரணி மற்றும் உண்ணாவிரதப் போராட்டம்... ஏன்?

Asianet News Tamil  
Published : Apr 24, 2018, 09:24 AM ISTUpdated : Sep 19, 2018, 02:16 AM IST
செங்கல்பட்டு சார் ஆட்சியரை கண்டித்து பேரணி மற்றும் உண்ணாவிரதப் போராட்டம்... ஏன்?

சுருக்கம்

rally and hunger strike protest against Chengalpattu sub collector Why?

காஞ்சிபுரம்

சாதிச் சான்றிதழ் தர மறுத்த செங்கல்பட்டு சார் ஆட்சியரைக் கண்டித்து தமிழ்நாடு எஸ்சி - எஸ்டி காட்டுநாயக்கன் சமூக சீர்திருத்த சங்கத்தினர் பேரணி மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்கள் சமூத்தினருக்கு சாதிச் சான்றிதழ் வழங்க மறுத்த செங்கல்பட்டு சார் ஆட்சியரை கண்டித்து தமிழ்நாடு எஸ்சி - எஸ்டி காட்டுநாயக்கன் சமூக சீர்திருத்த சங்கம் சார்பில் நேற்று பேரணி மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இந்தப் பேரணிக்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.கே.பாண்டியன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் மதுரை ஏ.பாஸ்கரன் பேரணியைத் தொடங்கி வைத்தார். மாவட்டத் தலைவர் ராமபாளையம் எஸ்.எஸ்.கே.சிவக்குமார் முன்னிலை வகித்தார். 

இந்தப் பேரணி செங்கல்பட்டு ராட்டினங்கிணறு பகுதியில் இருந்துபுறப்பட்டு ஜிஎஸ்டி சாலை, வேதாசலநகர், புதிய பேருந்து நிலையம், மணிக்கூண்டு வழியாக பழைய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது. 

இதில், "தங்களது பாரம்பரிய முறைப்படி ஈட்டி, கோடரி, வீச்சரிவாள், கம்பு ஆகியவற்றையும், தங்களால் வேட்டையாடப்படும் முயல், உடும்பு, கீரி ஆகிய விலங்குகளையும்" கையில் ஏந்தியவாறு பேரணியில் பங்கேற்றனர். 

அதன்பின், பழைய பேருந்து நிலையம் காமராஜர் சிலை அருகில் காட்டுநாயக்கன் சமூகத்தினர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். சங்கத்தின் மாநிலப் பொருளாளர் புதுக்கோட்டை ஏ.சின்னையா சங்கக் கொடியை ஏற்றிவைத்தார். 

இதற்கு முதன்மைச் செயலாளர் நாகப்பட்டினம் ஏ.அழகு பரமசிவம் தலைமை தாங்கினார்.  மாநில அமைப்புச் செயலாளர் காரைக்கால் மனோகரன், கடலூர் பன்னீர்செல்வம், நெய்வேலி சின்னதுரை, விழுப்புரம் வீரப்பன், சென்னை முனுசாமி, ராஜி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 

நிர்வாகிகள் செங்கல்பட்டு டி.பாலகுமார், வெங்கடேசன், தம்பிரான், ரமேஷ், சுப்பிரமணி, ஆறுமுகம், வெள்ளையன், பரமசிவம், விஜயன், ஏழுமலை, வேதகிரி, கன்னியப்பன், முருகன், மணி, வெங்கடேசன், குமார், சண்முகம் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். 

அவர்கள்  பேசியது: "செங்கல்பட்டு ராமபாளையத்தில் வசிக்கும் காட்டுநாயக்கன் சமூகத்தினருக்கு சாதிச் சான்றிதழ் வழங்க சார் ஆட்சியர்  மறுக்கிறார். மேலும் அவர் நம்மை அலைக்கழித்தும், அவமதித்தும் வருகிறார். வீட்டு மனைப் பட்டா, பசுமை வீடு, சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட நமது கோரிக்கைகளை ஏற்று உடனடியாக அவற்றை வழங்க வேண்டும். 

ஏற்கெனவே பொறுப்பில் இருந்த கோட்டாட்சியர் நமது சமூகத்தினருக்கு சாதிச் சான்றிதழ்களை உடனடியாக வழங்கி வந்தார். தற்போது உள்ள சார் ஆட்சியர் நம்மை இழிவுபடுத்தும் வகையில் செயல்படுகிறார். 

நம் குழந்தைகள் பள்ளியில் படிக்க சாதிச் சான்றிதழ் அவசியமானது. குழந்தைகளைப் படிக்க வைக்காவிட்டால் அது அவர்களது வாழ்வை கேள்விக் குறியாக்கி விடும்.

எனவே, மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரத்தில் தலையிட்டு உடனடியாக சாதிச் சான்றிதழ் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் போராட்டத்தின் முடிவில் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவற்றைத் திரும்ப வழங்க உள்ளோம். 

தற்போது மாநிலப் பொறுப்பாளர்கள் மட்டும் கலந்து கொள்ளும் போராட்டத்தை நடத்தியுள்ளோம்.  சார் ஆட்சியர் இனியும் சாதிச் சான்றிதழ் வழங்க மறுத்தால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவோம். மாநிலம் முழுவதிலும் உள்ள நமது சமூகத்தினர் ஒட்டுமொத்தமாகத் திரண்டு செங்கல்பட்டில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள்" என்று அவர்கள் பேசினர்.

இதில் செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், சாலவாக்கம், சோத்துப்பாக்கம், மாமல்லபுரம், மதுராந்தகம், திம்மராஜகுளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தங்களது குழந்தைகள், பெண்கள் என தங்கள் குடும்பங்களுடன் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 

இந்தப் போராட்டத்தின் இறுதியில் மாவட்டச் செயலாளர் சி.முருகன் நன்றி தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பவர்கள் டோர் டெலிவரி செய்கிறார்கள் - செல்லூர் ராஜு பேட்டி
ஓ.பி.எஸ்- டிடிவி.தினகரனுக்கு அமித் ஷா போடும் முட்டுக்கட்டை..! தவெகவுக்கு செக் வைக்கும் அமமுக..!