
திருப்பூர்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின்போது சமூக விரோதிகள் ஊடுருவல் என்ற ரஜினிகாந்தின் கருத்தை வரவேற்கிறேன் என்று விசுவ இந்து பரிஷத் மாநிலப் பொதுச் செயலாளர் ஆர்.ஆர்.கோபால் தெரிவித்தார்.
திருப்பூர் மாநகர பகுதிகளில் விசுவ இந்து பரிஷத் (தமிழ்நாடு) சார்பில் கொடியேற்று விழா நடைப்பெற்றது. அதனைத் தொடர்ந்து காந்திநகரில் உள்ள திருமண மண்டபத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டமும் நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்தில் அதன் மாநகர செயலாளர் முருகபாண்டி வரவேற்று பேசினார். இதில், மாநில இணை அமைப்பாளர் மனோஜ்குமார், மாநகர தலைவர் திருச்செல்வம், அமைப்பாளர் முத்துக்குமார் வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சுதாகர் மற்றும் பலர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் விசுவ இந்து பரிஷத் (தமிழ்நாடு) மாநில பொதுச் செயலாளர் ஆர்.ஆர்.கோபால் பங்கேற்று பேசினார்.
அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம், "தமிழகத்தில் அதிமுகவை, பா.ஜ.க. இயக்குகிறது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
எந்த மாநில அரசும் மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் மட்டுமே மாநிலத்தில் சிறப்பான ஆட்சியை கொடுக்க முடியும்.
தமிழக சட்டமன்றத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவர் கூட இல்லாத நிலையில் அ.தி.மு.க.வை பா.ஜ.க. இயக்குகிறது என்பது பொய்யான குற்றச்சாட்டு.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின்போது சமூக விரோதிகள் ஊடுருவல் என்ற ரஜினிகாந்தின் கருத்தை நான் வரவேற்கிறேன்.
கூடங்குளம் அணுமின் நிலையம், சல்லிக்கட்டு உள்ளிட்ட பிரச்சனைகளின்போது நடைபெற்ற உச்சகட்டப் போராட்டத்தின்போது என்ன நடந்ததோ அதுபோலவே தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை கடைசி கட்ட போராட்டத்திலும் நடைபெற்றுவிட்டது" என்று அவர் கூறினார்.