
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.
தற்போது அவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை, அமைச்சர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வந்தனர். இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று தூத்துக்குடிக்கு சென்றார். துப்பாக்கிசூட்டில் காயமடைந்தவர்களைச் சந்தித்து அவர் ஆறுதல் கூறினார்.
அப்போது இளைஞர் ஒருவரிடம் ரஜினி நலம் விசாரிக்க சென்றார். அப்போது, அந்த இளைஞர் நீங்கள் யார்? என்று கேட்டுள்ளார். ரஜினியை யார் என்று இளைஞர் கேள்வி கேட்டதால் அவர் அந்த இடத்தை விட்டு நகர்ந்ததாக செய்திகள் வெளியாகின. உண்மை என்னவென்றால், ரஜினி மருத்துவமனைக்குள் மற்றவர்களை விசாரித்து வருகையில், அந்த இளைஞர், ரஜினியைப் பார்த்து யார் நீங்க? என்று கேட்கிறார். அதற்கு நான் ரஜினிகாந்த் என்கிறார். ரஜினிகாந்த் என்பது தெரிகிறது. எங்கேயிருந்து வருகிறீர்கள்? என்று அந்த இளைஞர் மீண்டும் கேட்கிறார். அதற்கு ரஜினிகாந்த், நான் சென்னையில் இருந்து வருகிறேன் என்கிறார். உடனே அந்த இளைஞர், சென்னையில் இருந்து வருவதற்கு 100 நாட்கள் ஆகுமா? என்று கேட்க, ரஜினியோ இறுக்கமான முகத்துடன் சிரித்தபடியே அந்த இடத்தை விட்டு விலகிச் செல்கிறார்.
ரஜினியை கேள்வி கேட்ட அந்த இளைஞரின் பெயர் சந்தோஷ். இவர், அனைத்துக் கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பின் தூத்துக்குடி ஒருங்கிணைப்பாளராக உள்ளார். ரஜினியிடம் நடந்த உரையாடல் குறித்து சந்தோஷ் கூறும்போது, ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 100 நாட்களாக போராடி வருகிறோம். அப்போதெல்லாம் நடிகர் ரஜினிகாந்த் எங்களைச் சந்திக்கவோ, போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கவோ வரவில்லை.
துப்பாக்கிச்சூட்டில் பலர் உயிரிழந்தனர், பலர் உயிருக்கு போராடி கொண்டிருக்கின்றனர். இந்த சம்பவம் நடந்து 7 நாட்கள் ஆகின்றன. இத்தனை நாட்களாக இந்த சம்பவம் குறித்து ரஜினி வாய் திறக்கவில்லை. பாதிப்புக்கு ஆளானவர்களை சந்திக்கவும் இல்லை. இன்று எதற்காக வருகிறார்? என்று கேள்வி எழுப்புகிறார்.
ஸ்டெர்லைட் ஆலை சீல் வைக்கப்பட்ட பிறகு ரஜினி வந்துள்ளார். ஆலை மூடவில்லை என்றால், ஒருவேளை அவர் வந்திருக்க மாட்டார். இதற்கு காரணம் உள்ளது. காலா படம் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது. இனியும் மக்களைப் போய் சந்திக்கவில்லை என்றால், அவருடைய படம் தமிழகத்தில் ஓடாது. அதனால்தான் எங்களை வந்து சந்தித்து நிதி உதவி வழங்குகிறேன் என்று சொல்லியிருக்கிறார்.
அதனால்தான் ஏற்பட்ட கோபத்தால்தான் அவரை அப்படி கேட்டேன் என்கிறார் சந்தோஷ். நாங்கள் சமூக விரோதிகள் என்பதை அவர் பார்த்தாரா? அல்லது போராட்டத்தில் சமூக விரோதிகள் கலந்து கொண்டார்கள் என்பதை ரஜினி தனது ஏழாவது அறிவை வைத்து உணர்ந்தாரா? எங்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளாத ரஜினிக்கு எந்த தகுதியும் இல்லை என்று சந்தோஷ் ஆவேசமாக பேசினார்.