
தொடர்மழை காரணமாக கடும் வெள்ளத்தில் சிக்கியுள்ளது சென்னை மடிப்பாக்கம். அதிக பட்சமாக 2 மணி நேரம் பெய்த மழையில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால், பொது மக்கள் திண்டாடிவருகின்றனர். ஏராளமானோர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறிவருகின்றனர்.
வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து சென்னை முழுவதும் கனமழை கொட்டி வருகிறது. இதனால் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. குறிப்பாக சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், பள்ளிக்கரணை, முடிச்சூர் போன்ற பகுதிகளிலும், மடிப்பாக்கம், ராம்நகர், சதாசிவம் நகர் போன்ற பகுதிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
மடிப்பாக்கத்தில் நேற்று இரவு முழுவதும் பெய்த மழையால் நூற்றுக்கணக்கான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. மழை நீருடன் கழிவுநீரும் கலந்துள்ளதால் பொது மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
ராம்நகர் பகுதி முழுவதும் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால், கீழ்தளத்தில் உள்ள குடியிருப்புவாசிகள் முதல் தளத்துக்கு குடிபெயர்ந்துள்ளனர். சாலை முழுவதும் 4 அடி உயரத்துக்கு மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடைகளுக்குகூட செல்லமுடியாமல் தவித்து வருகின்றனர்.
இதேபோல் சதாசிவம் நகர் பகுதிகளிலும் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. இதனால் அப்பகுதிமக்கள் வீட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர். பலர் தங்களது வீடுகளுக்குள் புகுந்துள்ள மழை நீரை மிகுந்த சிரமத்துடன் வெளியேற்றி வருகின்றனர்.
ஒரே நாள் மழைக்கு கூட தாங்காத இந்த மடிப்பாக்கம் பகுதி தொடர்ந்து மழை பெய்தால் முற்றிலும் மூழ்கிவிட வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.