
வட கிழக்கு பருவமழை மேலும் தீவிரமடைந்துள்ளதால், தமிழக கடலோர மாவட்டங்களை கன மழை புரட்டிப் போட வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு மிக கன மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வட கிழக்கு பருவ மழை கடந்த 27 ஆம் தேதி தொடங்கிய நிலையில் நேற்று முன்தினம் முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.
சென்னையைப் பொறுத்தவரை நேற்று இரவு முழுவதும் பெய்த பேய் மழையால் சாலைகள் முழுவதும் நீரில் மூழ்கிக் கிடக்கின்றன. வட சென்னையில் பல சுரங்கப்பாதைகள் நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. சீர்காழியில் அதிக அளவாக நேற்று ஒரே நாளில் மட்டும் 31 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.
இதே போன்று கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளுர், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்காக செய்தியாளர்களிடம் பேசிய அவர், வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக கூறினார்.வங்கக் கடலில் நிலை கொண்டுடிருந்த, காற்றழுத்தத் தாழ்வு நிலை மேற்கு திசை நோக்கி நகர்ந்து மன்னார்குடா பகுதியில் நிலை கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
இதனால் தமிழகத்தில் 21 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், 16 மாவட்டங்களில் மிக கனமழை ( ஒரு சில மாவட்டங்கள் இரண்டிலும் அடங்கும்) பெய்ய வாய்ப்புள்ளதாகவும் பாலசந்திரன் தெரிவித்தார்.
அடுத்த இரண்டு நாட்களுக்கு பெய்யப்போகும் மிக கன மழை தமிழகத்தைப் புரட்டிப் போடும் அளவுக்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.