
சென்னையில் கனமழை பெய்துவருவகிறது. பல இடங்களில் வெள்ள நீர் தேங்கி, மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்துள்ளனர். வடகிழக்குப் பருவ மழையின் துவக்கமே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் தங்குமிடம் தேடிச் செல்கின்றனர். இந்நிலையில், மக்களைக் குழப்பும் விதமாக பல விதமான பழைய தகவல்கள் வாட்ஸ் அப்களில் பரப்பப் படுகின்றன. இது மேலும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
சென்ற 2015ம் வருடம் ஏற்பட்ட பெருமழை வெள்ளம், 2016ல் ஏற்பட்ட புயல் என பாதிப்புகளை சென்னை சந்தித்தபோது, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் சில சமூக நல ஆர்வலர்கள் அப்போது சில நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அப்போது வாட்ஸ் அப் டிவிட்டர் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வாயிலாக தகவல்கள் அனுப்பப் பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகரமாக இருந்தன.
இந்நிலையில், அதே பழைய தகவல்களை... அதாவது, சத்யம் தியேட்டரில் தங்கலாம், உதயம் தியேட்டரில் உறங்கலாம் என்பதுபோன்ற தவறான தகவல்களை இப்போதும் சமூக வலை தளங்களில் பலர் பரப்பி வருகின்றனர். பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவும் நல்ல நோக்கத்துடன் அவை பகிரப் பட்டாலும், தகவல்களின் உண்மைத் தன்மையை அவர்கள் உணர்வதில்லை. இதனால் அந்தத் தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கும் இப்போது பிரச்னை தலை தூக்கியுள்ளது.
எனவே இரு வருடங்களுக்கு முன்னர் வந்த பழைய தகவல்களை இந்த நேரத்தில் அவற்றின் உண்மைத் தன்மை அறியாமல் பகிர்வதைத் தவிர்ப்பதே நல்லது என்றும், உண்மையான தகவல்களை மட்டுமே பகிர்வோம் என்றும் அடுத்தடுத்து அவற்றுக்கு பதில் கொடுத்து வருகின்றனர் சமூக ஆர்வலர்கள்.
பிறருக்கு உதவி செய்வதாக எண்ணிக் கொண்டு பழைய தகவல்களையே மீண்டும் மீண்டும் பகிர்ந்து, உதவி செய்பவர்களுக்கு உபத்திரவம் கொடுக்காமல் இருக்க வேண்டும் என்றும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் தகவல்களை, பதிவிட்டவரின் பெயர், தேதி இல்லாமல் அதனை எவருக்கும் பகிர வேண்டாம் என்றும் வேண்டுகோள்களை முன்வைத்து வருகின்றனர்.