பெருகிய மழை நீர்... ஊரை காலி செய்யும் மக்கள்... மழைக்கால துவக்கமே சோகம்!

 
Published : Oct 31, 2017, 11:53 AM ISTUpdated : Sep 19, 2018, 01:22 AM IST
பெருகிய மழை நீர்... ஊரை காலி செய்யும் மக்கள்... மழைக்கால துவக்கமே சோகம்!

சுருக்கம்

rain water enters resident areas people vacate their houses blaming officials

சென்னையில் வடகிழக்குப் பருவ மழையின் துவக்கமே சோகமாக மாறிவிட்டது. கடந்த இரு நாட்களாகப் பெய்த  கனத்த  மழையினால் சென்னையின் பல பகுதிகளில் மழை நீர் வெள்ளமாகத் தேங்கியது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் புகுந்து, மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்துள்ளது. 

தரைத்தளத்தில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததால், கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட சோகம் இப்போதும் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர் பொதுமக்கள். குறிப்பாக, சென்னையின் புறநகர்ப் பகுதிகளில்தான் பாதிப்பு மிக அதிகம். அடையாறு, கூவம் நதிக்கரை ஓரங்களில் வசிப்பவர்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறார்கள். 

சென்னையின் புறநகர்ப் பகுதியில் அடையாறு ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துவிட்டது. குறிப்பாக, சென்னை முடிச்சூர் பகுதியில் கடந்த இரு வருடம் முன் ஏற்பட்ட வெள்ளம் போல் இப்போதே நீர் தேங்கத் துவங்கியுள்ளது. பெருகிய நீரை வெளியேற்ற வேண்டும் என்று அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு அந்தப் பகுதி மக்கள் கோரி வருகின்றனர். 

முடிச்சூர், வரதராஜபுரம் பகுதி, மகாலட்சுமி நகர், அஷ்டலட்சுமி நகர் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளில், வெள்ள நீர் தேங்கியுள்ளது. சாலைகளில் இடுப்பளவு நீர் பெருகியுள்ளதால், வீட்டை விட்டு வெளிவர இயலாமல் மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்துள்ளனர். இந்நிலையில், இந்தப் பகுதிகளில் வீடுகளின் தரைத்தளத்தில் வெள்ள நீர் புகுந்ததால் முடிச்சூர் பகுதியில் வசிப்பவர்கள், வீட்டின் பொருள்களை பாதுகாப்பாக வைத்துவிட்டு, அடுத்த நான்கைந்து நாட்களுக்கு தங்கள் உறவினர் வீடுகளில் தஞ்சம் புக ஊரைக் காலி செய்து வருகின்றனர். சிலர் மூட்டை முடிச்சுகளுடன் காலையில் அங்கிருந்து வெளியேறியதைக் காண முடிந்தது.  

குறிப்பாக, அடையாறு ஆற்றில் வாதனூர், ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் இருந்து வரும் கால்வாய்கள் சேருகின்ற பகுதி இது. எனவே சென்னை நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழை நீர் இந்தக் கால்வாய்களில் சேர்ந்து ஒரே நேரத்தில் வெள்ளமாகக் கலக்கின்றது. எனவே சாதாரண மழை என்றாலே மழை நீர் பெருகிவிடும் இந்த இடத்தில் நேற்று பெய்த கன மழை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு வருடங்களுக்கு முன்னர் அப்போதைய ஆட்சியர் இந்தப் பகுதியில் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாகக் கூறியிருந்தார். ஆனால் அந்த நடவடிக்கை தொய்வடைந்ததால், மேலும் மேலும் ஆக்கிரமிப்புகள் கூடி, இந்த வருடம் மோசமான சூழ்நிலையை ஏற்படுதியுள்ளதாக இந்தப் பகுதி மக்கள் புகார் கூறி வருகின்றனர். 

இந்நிலையில் அங்கிருந்து வெளியேறுபவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ஆட்சியர் அமுதா நடவடிக்கை எடுத்து வருகிறார் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

ஆட்டம் ஆரம்பம்..! நேற்று ராஜாஜி... இன்று சுப்பிரமணிய பாரதி.. தமிழர்களுக்கு மோடி மரியாதை
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு