மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த 7 அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மிக்ஜம் புயலால் தொடர்ந்து கனமழை பெய்துவரும் நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் நடைபெறுவதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
வங்கக்கடலில் நிலைகொண்டிருக்கும் மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. மழை இன்று நள்ளிரவுக்குப் பின் படிப்படியாகக் குறையும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இருப்பதும் இரவு பத்து மணிவரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மிகவும் சவாலான இந்த நேரத்தில் மக்களைத் தேடிச்சென்று அவர்களுக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த 7 அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் சென்னை, ஆவடி மற்றும் தாம்பரத்தில் தூய்மைப் பணிகளை நாளை முதல் விரைவுபடுத்த பிற மாவட்டங்களில் இருந்தும் 1000 பணியாளர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டிருக்கிறார்.