
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் புதிதாக உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் எனவானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளா மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதியின் வளிமண்டலத்தில் உருவான மேலடுக்கு சுழற்சி நீடிக்கும் அதே வேளையில், தமிழக கடலோர பகுதிகளை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதியில் புதிதாக மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது.
இதனால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும்.
சென்னையை பொறுத்தவரை வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தீபகற்ப இந்தியாவின் சில பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை முடிவடைய உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.