Tamilnadu Rain: 2023 ஆம் ஆண்டில் தமிழகத்தில் 1,179 மி.மீ மழை பதிவாகியுள்ளது, இது கடந்த ஆண்டை விட 143 மி.மீ அதிகம். வடகிழக்கு பருவமழை இன்னும் நிறைவடையவில்லை, பொங்கல் வரை மழை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தை பார்க்கும் போது பதிவான மழையின் அளவு 1, 179 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இதில், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் 53 மி.மீ., மார்ச், ஏப்ரல், மே கோடை கால மாதங்களில் 147 மி.மீ., ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவமழை காலத்தில் 389 மி.மீ., அக்டோபர், நவம்பர், டிசம்பர் வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில் 590 மி.மீ., என மொத்தம் 1,179 மி.மி., மழை பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டைவிட இம்முறை 143 மி.மீ. மழை அதிகம். கடந்த ஆண்டு 1,036 மி.மீ., மழை பதிவானது.
இதையும் படிங்க: பொங்கல் பரிசு தொகுப்பு! வீடு தேடி வரும் டோக்கன்! பொதுமக்களுக்கு எப்போது கிடைக்கும்? வெளியான குட்நியூஸ்!
தென் மேற்கு பருவமழை காலத்தில் செப்டம்பர் மாதத்தில் இயல்பை விட 64 சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளது. வட கிழக்கு பருவமழை காலத்தில் அக்டோபர் மாதத்தில் 214 மி.மீ., நவம்பர் மாதத்தில் 140 மி.மீ., டிசம்பர் மாதத்தில் 235 மி.மீ., என மொத்தம் 589 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில் 33 சதவீதம் அதிகம். கடந்தாண்டை விட இது 4 சதவீதம் கூடுதல் ஆகும். இந்த ஆண்டு கடந்தாண்டைவிட 27 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியிருக்கிறது.
குறிப்பாக, ஃபெஞ்சல் புயலால் அதிகமாக மழை கிடைத்திருந்தாலும், டிசம்பர் 11-ம் தேதி முதல் 14 வரையிலான காலக்கட்டத்தில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக பரவலாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில், அதி கனமழையும், மிக கனமழையும் பெய்துள்ளது. தென்மேற்கு பருவமழை காலக்கட்டத்தில் மாவட்ட அளவில் பார்க்கும்போது நெல்லை மாவட்டத்தில் மட்டும் இயல்பை விட மிக அதிகமாக 265 சதவீதம் அதிகமாக பதிவாகி இருக்கிறது. 16 மாவட்டங்களில் இயல்பை விட மிக அதிகமாகவும், 17 மாவட்டங்களில் இயல்பை ஒட்டியும், 6 மாவட்டங்களில் இயல்பை விட குறைவாகவும் மழை பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க: நகராட்சியான கன்னியாகுமரி முதல் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட 7 சூப்பர் அறிவிப்புகள் இதோ!
வடகிழக்குப் பருவமழை காலத்தில் நெல்லை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் இயல்பை விட மிக அதிகமாகவும், 23 மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாகவும், 11 மாவட்டங்களில் இயல்பான அளவிலும் மழை பதிவாகியுள்ளது. அரபிக் கடல் மற்றும் வங்கக்கடலில் கடந்த ஆண்டு 6 புயல்கள் உருவான நிலையில், இந்தாண்டு 4 புயல்கள் உருவானது. வடகிழக்கு பருவமழை நிறைவு பெறவில்லை. பொங்கல் வரை தமிழகத்தில் மழை இருக்கும். அதன் பிறகு தான் வட கிழக்கு பருவமழை விலகும் என பாலச்சந்திரன் கூறியுள்ளார்.