CM Stalin Made 7 Announcement: கன்னியாகுமரியில் நடைபெற்ற அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருக்குறள் ஓலைச்சுவடிகள், புத்தகங்கள் மற்றும் புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்து சிறப்பு மலரை வெளியிட்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கன்னியாகுமரியில், முக்கடல் சூழும் குமரி முனையில் அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில், திருக்குறள் ஓலைச்சுவடிகள், புத்தகங்கள், மின்நூல்கள் மற்றும் திருவள்ளுவர் சிலை பற்றிய புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்து, அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலை வெள்ளி விழா சிறப்பு மலரை வெளியீட்டு, அய்யன் திருவள்ளுவர் திருவுருவச்சிலை வெள்ளி விழா வளைவிற்கு அடிக்கல் நாட்டி, திருக்குறள் சார்ந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுத் தொகை வழங்கி சிறப்பித்து முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.
இதையும் படிங்க: நிரந்தரமாக மூடப்பட்ட பிரபல உதயம் தியேட்டர்! வாங்கியது யார்? அங்கு என்ன வரப்போகிறது தெரியுமா?
அப்போது திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னாடியே, சட்டமன்றத்தில் வாதாடி வள்ளுவர் படம் திறக்க வைத்தவர் நம்முடைய தலைவர் கலைஞர். போக்குவரத்துத் துறை அமைச்சரானதும், அனைத்து பேருந்துகளையும் திருக்குறளை எழுதினார். பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தபோது, அனைத்து அரசு விடுதிகளிலும், திருவள்ளுவர் படமும், திருக்குறளும் இடம்பெற வைத்தார். காவலர் பதக்கத்தில் வள்ளுவரைப் பொறித்தார். தமிழறிஞர்களால் உருவாக்கப்பட்ட திருவள்ளுவர் ஆண்டை அரசின் சார்பில் ஏற்றுக்கொண்டு அறிவித்தார். மேலும் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 7 சூப்பர் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
7 அறிவிப்புகள் இதோ!
* முக்கடல் சூழும் குமரிமுனையில் இங்கிருந்து சுற்றுலாப் பயணிகள் அனைவரும் அய்யன் திருவள்ளுவர் சிலையை சென்றடைய பயனடைவதற்காக படகு சவாரி வசதியை மேம்படுத்துவதற்காக 3 புதிய பயணிகள் படகுகள் வாங்கப்படும். முதல் படகிற்கு தியாகத்தின் உருவாகி, தொண்டின் கருவாகி, தமிழ்நாட்டில் அடித்தளமிட்ட பெருந்தலைவர் காமராசர் பெயரும், இரண்டாம் படகிற்கு தென்குமரியை தமிழ்நாட்டுடன் இணைக்க வலியுறுத்தி போராடி சாதனைப் படைத்த சாதனையாளர் மார்சல் நேசமணி பெயரும், மூன்றாம் படகிற்கு கனடாவில் பிறந்தாலும், கன்னித்தமிழ் வளர்த்தவரும், திருக்குறளை மொழிப் பெயர்த்தும், தமிழ் இலக்கண நூலை எழுதியும், அழியாப் படைப்புகளை அளித்த ஜி.யு.போப் பெயரும், என மூன்று பெயர்களும் அந்தப் படகுகளுக்கு சூட்டப்படும்.
* ஒவ்வொரு மாவட்டத்துக்கும் திருக்குறளில் ஆர்வமும், புலமையும் மிக்க ஆசிரியர்கள், பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்குப் பயிற்சி வழங்கி மாவட்டம்தோறும் தொடர் பயிலரங்குகள், பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். 'திருக்குறள் திருப்பணிகள்' தொடர்ந்து நடைபெற திட்டம் வகுக்கப்படும். இதற்காக, ஆண்டிற்கு மாவட்டம் ஒன்றிற்கு மூன்று இலட்சம் ரூபாய் வழங்கப்படும்.
* ஆண்டுக்கு 133 உயர்கல்வி நிறுவனங்களில், திருக்குறள் தொடர்பான கலை இலக்கிய அறிவுசார் போட்டிகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்த திட்டமிடப்படும்.
* ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் கடைசி வாரம் 'குறள் வாரம்' கொண்டாடப்படும்.
* தமிழ்த் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான திருக்குறள் மாணவர் மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்படும்.
ஆறாவது அறிவிப்பு
* திருக்குறளும், உரையும் அரசு அலுவலகங்களில் எழுதப்படுகிறது போல, தனியார் நிறுவனங்களிலும் எழுதுவதற்கு, ஊக்குவிக்க உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
இத்துடன் சேர்த்து, குமரிக்கு வந்து இந்த பகுதிக்கான அறிவிப்பு செய்யாமல் இருக்க முடியாது? தமிழ்நாட்டின் தென்கோடியில் அமைந்திருப்பது மட்டுமில்லாமல் வள்ளுவர் சிலையால் சிறப்பு பெற்றிருக்கின்ற, சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்ற வகையில், கன்னியாகுமரி பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்படும். பேரறிஞர் சிலையாக இருக்கக்கூடிய வள்ளுவர் சிலையினை இந்த வெள்ளி விழாவில் நான் மறுபடியும் சொல்கிறேன். திருவள்ளுவர் வெறும் சிலையல்ல; திருக்குறள் வெறும் நூல் அல்ல; நம்முடைய வாழ்க்கைக்கான வாளும், கேடயமும். அது நம்மைக் காக்கும், நம்மை அழிக்க வரும் தீமைகளை தடுக்கும். நம்மை மட்டுமல்ல, காவி சாயம் பூச நினைக்கிற தீய எண்ணங்களையும் விரட்டியடிக்கும். தனி மனிதர் முதல் அரசு வரைக்கும் நீதிநெறி சொன்னவர் நம்முடைய வள்ளுவர் அவர்கள். நாம் செய்ய வேண்டியது, பள்ளிகளில், கல்லூரிகளில், அரசு அலுவலகங்களில் திருக்குறளை இன்னும் இன்னும் அதிகமாக இடம்பெறச் செய்யவேண்டும். இது அரசுக்கான உத்தரவு மட்டுமல்ல, தனியார் நிறுவனங்களும் இதைப் பின்பற்றவேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.