
நீலகிரி
ஊட்டியில் காட்டுத்தனமாக கொட்டித் தீர்த்த மழையால் வீடுகள், காவல் நிலையம் என அனைத்தும் நீரில் மூழ்கின.
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் நேற்று காட்டுத்தனமாக மழை பெய்ததால் பேருந்து நிலையம் மற்றும் முக்கியச் சாலைகளில் மழைநீர் வெள்ளமாய் பெருக்கெடுத்தது.
இந்த மழையினால் சுற்றுலா\ப் பயணிகள் தங்களது வாகனங்களை ஆங்காங்கே சாலைகளில் நிறுத்தினர்.
ஊட்டி மார்க்கெட் பகுதியில் மழைநீரும், சாக்கடை கழிவுநீரும் கலந்து ஓடியதால் அனைவரும் மூக்கைப் பிடித்துக் கொண்டே கடந்த் சென்றனர்.
இரண்டு மணி நேரம் தொடர்ந்து கொட்டித் தீர்த்த மழையால், தண்ணீர் குளம்போல தேங்கி நின்றதால் சந்தை, படகு இல்லச் சாலை, இரயில்வே காவல் நிலையம் உள்பட பல்வேறு இடங்களில் நீரில் மூழ்கின.
கோடப்பமந்து கால்வாயில் வெள்ளம் ஏற்பட்டதால், அதை ஓட்டியுள்ள கிரீன்பில்டு பகுதியில் சுமார் 20 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் மக்கள் வீட்டில் உள்ள பொருட்கள் தண்ணீரில் அடித்து செல்லாமல் இருக்க, அவற்றை பாதுகாப்பான இடங்களில் வைத்தனர்.
மேலும், சினம் கொண்ட மக்கள் கோடப்பமந்து கால்வாயை தூர்வாரக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட 12 பெண்கள் உள்பட 27 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
ஊட்டி சந்தைப் பகுதியில் தேங்கி நின்ற மழைநீரை கடை வைத்திருப்பவர்கள் அடைப்புகளை அகற்றி, தண்ணீரை வெளியேற்றினர்.