
நாமக்கல்
நாமக்கல்லில் மூன்று வாரங்களாக குடிநீர் இல்லாமல் தவிக்கு மக்கள் வெற்றுக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அடுத்த அலங்காநத்தம் பேருந்து நிறுத்தம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இந்தப் பகுதியில் கடந்த மூன்று வாரங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். எனவே அங்கு குடிநீர் விநியோகிக்க வேண்டும் என்று மக்கள் அலங்காநத்தம் பேருந்து நிறுத்தம் அருகே துறையூர் பிரதான சாலையில் நேற்று வெற்றுக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் துறையூரில் இருந்து நாமக்கல்லுக்கு வரும் பேருந்துகள் காளிச்செட்டிப்பட்டி, தூசூர் வழியாக திருப்பிவிடப்பட்டது.
இதுகுறித்த தகவலறிந்ததும் எருமப்பட்டி வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பிரபாகர், கமலகண்ணன் மற்றும் எருமப்பட்டி காவல் உதவி ஆய்வாளர் மாதையன் ஆகியோர் அலங்காநத்தம் பேருந்து நிறுத்தம் பகுதிக்கு வந்து சாலை மறியல் செய்த மக்களிடம் உடனடியாக குடிநீர் விநியோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
இதனை ஏற்ற மக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.